வாகரை -ஓமடியாம்மடு கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு


கொரோனா நோய் தொற்றுக்காரனமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த காலங்களில் கூலித் தொழில்கள் செய்துவந்த மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அரசாங்க அரச சார்பற்ற நிறுவனங்களினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகஸ்ட பிரதேசமான வாகரை பிரதேச செயலகத்தில் ஓமடியாம்மடு கிராமம் காணப்படுகின்றது. 

இக்கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் நிலையறிந்த பிரதேச செயலாளர் எஸ்.கரன் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.கலாமதி பத்மராஜாவிற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய கிரான்குளத்தில் இயங்கி வருகின்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான விவேகானந்த சமுதாய நிறுவனம் இந்த உதவியினை வழங்க முன்வந்திருந்தது.

இன்று (27) காலை இந்த நிவாரணப் பொருட்களை ஓமடியாம்மடு கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் ஓமடியாம்மடு கிராம சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வாகரை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் விவேகானந்த சமுதாய நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ், தகவல் திணைக்கள மாவட்ட ஊடக பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வாகரை பிரதேச செயலகப்பிரிவில் அதிகஸ்டமான கிராமங்களில் இக்கிராமம் முதலிடத்தில் உள்ளது இங்கு வாழ்கின்ற மக்கள் பிரதான தொழிலாக விவசாயத்தினையும் கால்நடை வளர்ப்பையுமே கொண்டுள்ளனர். தற்போதைய அசாதாரண காலநிலையில் இவர்களின் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்தவகையில் இவர்களுக்கு மூன்றாம் கட்டமாக இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் எஸ்.கரன் உரையாற்றுகையில்,
கொரோனா தாக்கத்தில் இருந்து உலகம் விடுபடும்வரையும் மக்கள் கடுமையான அவதானத்துடன் இருக்கவேண்டும். சுகாதார திணைக்களத்தினரின் அறிவுறுத்தல்களை வானொலி, தொலைக்காட்சி மூலமாக அறிவூட்டப்படுகின்றது. அதனை பின்பற்றுங்கள். முக கவசங்களை அணியுங்கள். கைகளை கழுவுங்கள். உறவினர்களுடன் அதிகமாக அளவலாவ வேண்டாம் என நீண்ட அறிவுரையினை ஆற்றியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றிய விவேகானந்த சமுதாய நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ் கூறுகையில்,
தங்களுக்கு கிடைக்கப்பட்ட இந்த நிதியானது அவுஸ்திரேலிய மருத்துவ உதவிக்கான நிதியத்தின் மூலமாகவே இவ்வுதவியினை வழங்குவதாகவும் இவ்வாறு புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது சமூகத்தினாலேயே இவ் உதவிகள் கிடைத்துவருகின்றது எனவும் எதிர்காலத்தில் இக்கிராமமக்களுக்கான நிரந்தரமான தொழில்களை உருவாக்குவதற்கு பிரதேச செயலாளருடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் கூறினார்.