இலங்கையில் மீண்டுமொரு ஐ.எஸ் தாக்குதல்: பரபரப்பு தகவலை மறுக்கும் அரசு !

(ஜே.எப்.காமிலா பேகம்)
தீவிரவாதக் கும்பல் தாக்குதல்களை நடத்தப்போவதாக, சமூக வலைத்தளங்களில் பிரசாரமாகிவரும் தகவல்களில் உண்மை இருக்கின்றதா என்கிற தெளிவூட்டலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வெளியிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்ட அவர், அப்படியான எந்தவொரு தகவலும் உண்மையில்லை என்று கூறியிருக்கின்றார்.

வெறும் சமூக வலைத்தளங்களில் மாத்திரம் வெளியாகிவரும் இந்த தகவல்களை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் வழிநடத்தப்படுகின்ற பாதுகாப்புத்துறை கட்டமைப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நாட்டிற்கு உள்ளக அல்லது வெளியகத்திலிருந்து வருகின்ற எந்தவொரு அச்சுறுத்தல் தொடர்பிலான தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்கின்றதோடு அதனால் மக்கள் எவ்விதத்திலும் அச்சமடைய அவசியமில்லை என்று தனது அறிக்கையில் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளரான கேர்ணல் ஸ்ரீமால் ரொட்றிகோ நேற்று வெளியிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கை பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு மத்தியில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதக் கும்பல் ஒன்று அழிவு ஒன்றை நாட்டிற்குள் ஏற்படுத்த முயற்சித்திருப்பதாக அவர் அந்த அறிக்கையில் புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவித்திருக்கின்றார்.

அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் நுழைத்து கூரிய ஆயுதத்தினால் மக்களைத் தாக்குதல் நடத்த திட்டங்கள் இருக்கலாம் என்ற எச்சரிக்கையை கேர்ணல் ஸ்ரீமால் ரொட்றிகோ செய்திருக்கின்றார்.

குறித்த அறிக்கை நேற்று திங்கட்கிழமை புலனாய்வுப் பிரிவிடம் கேர்ணல் ஸ்ரீமால் ரொட்றிகோ கையளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.