இயற்கைவாதமும் இன்றைய நிலையும்



தத்துவங்களானது மேலைத்தேயம் கீழைத்தேயம் என்ற அடிப்படையில் வளர்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. அந்தவகையில் மேலைத்தேய கருத்துக்கள் கீழைத்தேய கருத்துக்களையும் விட வளர்ச்சி பெற்றுக் காணப்படுகின்றது. பல தத்துவக் கருத்துக்கள் உருவெடுத்திருந்தாலும் பிரான்ஸிய நாட்டைச் சேர்ந்த ஜின் ஜக்கியுஸ் ரூசோ அவர்களின் இயற்கைவாதம் எனும் தத்துவக் கருத்து இன்றளவும் மக்கள் மனதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக காணப்படுகின்றது. அந்தவகையில் பிள்ளை வளர்ப்பு, பிள்ளையின் கல்வியில் இயற்கையின் தொடர்பு பற்றிய விடயங்கள் இயற்கைவாதத்தின் அடிப்படை விடயங்கள் ஆகும்.

பிள்ளையானது இயற்கையுடன் ஒன்றிப்பிணைய வேண்டும், இயற்கையுடனான வாழ்க்கையே சிறந்தது என்று நாகரீக சூழலுக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். அந்த வகையில் தற்காலம் நாகரீக மயமாக்கலின் காரணமாக அனைத்தும் செயற்கையாக மாறிக்கொண்டு செல்கின்றது. இதன் காரணமாக அனைவரும் இயற்கையை நோக்கிய வண்ணம் நகரும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக, அலோபதி மருந்துகளுக்கு பதிலாக இயற்கை மருந்தும், இயற்கை உணவும் முக்கியம் பெறுகின்றது. இது போன்றுதான் இன்று உள்ள மாணவர்களுக்கு வகுப்பறைகளற்ற காற்றோட்டமான இயற்கையை உணரும் வகையிலான கல்வித்திட்டங்களை நோக்கி நகரும் நிலை காணப்படுகின்றது. இதற்கு உதாரணமாக இந்தியாவின் வாரனாசி எனும் இடத்தில் வகுப்பறைகளற்ற பாடசாலை உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கை வாதம் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு விதிக்காமல் சுதந்திரமாக இயற்கையின் வழியின் படியே குழந்தைகளை இயல்பாகவிட வேண்டும் என்று கூறுகின்றது. இதற்கு சான்று பகிரும் வகையில் இந்தியாவில் காயத்திரி இளங்கோ அவர்கள் இயற்கைப்பள்ளி(organic school) ஒன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளார். பிள்ளைகள் இயற்கையை மையமாக கொண்டு செயற்பட வேண்டும் எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இக்கல்வி நிலையம் இயங்குகின்றது. இங்கு விளையாட்டு, இசை போன்றன மூலம் கல்வி கொடுக்கப்படுவதாகவும் இயற்கையான நடைப்பயிற்சி மற்றும் மரம் ஏறுதல் போன்றவற்றுடன் இங்கு இயற்கைப் பொருள், இயற்கை சூழலே முக்கியமானது என்றும் கூறுகின்றனர்.

மேலும் ஒரு பிள்ளை வாழ்வில் அடைய முடியாத குறிக்கோளை திணிக்கக் கூடாது என்றும் பிள்ளையின் விருத்தியின் மீது பல கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்றும் இயற்கைவாதம் வலியுறுத்துகின்றது. இதன் அடிப்படையில் தான் ஐந்தாம் தர மாணவர்களின் புலமைப் பரீட்சை பற்றிய மீளாய்வு நடைபெற்றது. இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்தின்படி தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், மாகாணக்கல்வி ஆகியன குறைந்தது ஆறு மாதங்களுக்கு கூடி கலந்தாலோசிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் பின்புதான் ஐந்தாம் தர புலமைப் பரீட்சை விருப்புக்குரிய பரீட்சையாக மாற்றப்பட்டது(2019).

மேலும் இயற்கையை மையமாக கொண்ட வகையிலேயே சிறந்த கல்வியை வழங்குகின்ற நாட்டிற்கு சிறந்த உதாரணமாக பின்லாந்தினை குறிப்பிடலாம். அந்தவகையில் OCED அமைப்பினால் சிறந்த கல்வியை வழங்கும் நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிள்ளைகளின் உளம், உடல் என்பவற்றில் அதீத அக்கறை மற்றும் இயற்கையான விடயங்களை மாத்திரம் உட்புகுத்தும் வகையில் இந்நாட்டு பாடசாலைகளும், ஆசிரியர்களும் செயற்படுகின்றனர். ஆரம்பத்தில் இப்பிள்ளைகளுக்கு கணினி பயன்பாடு இல்லாமலேயே கற்பிக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி காலணி அணிந்து வகுப்பறையினுள் உட்பிரவேசிக்க தடைவிதித்துள்ளனர் ஏனெனில், பிள்ளைகள் இயற்கை நிலையை உணர வேண்டும். மற்றும் இங்கு பிள்ளைகளை தரவரிசைப்படுத்தாமல் பிள்ளைகளின் ஆற்றல் பற்றிய விவரிப்பாகத்தான் மாணவர் அடைவுமட்ட அட்டை காணப்படுகின்றது. பிள்ளைகளை இயற்கையோடு வளர்த்தெடுக்கும் பாடசலைகளாகத்தான் இந்நாட்டுப்பாடசலைகள் விளங்குகின்றன.

ஆராய்தல், பரிசோதித்தல், அவதானித்தல் எனும் கற்றல் முறைகளையே இயற்கைவாதம் கொண்டுள்ளது. இதனடிப்படையில் தரம் 8 மாணவர்களுக்கு 2015ம் ஆண்டு நடாத்தப்பட்ட zonal level inventors competition, தரம் 9 மாணாக்களுக்கு 2016 நடைபெற்ற science copies nature’s secrets போன்றன கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை மட்டங்களில் நடைபெற்ற போட்டிகள் ஆகும்.

அடுத்ததாக தொழிற்கல்வியின் முக்கியத்துவம் இயற்கைவாதத்தின் முக்கிய விடயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் 2017 அறிமுகப்படுத்தப்பட்ட 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி, முயற்சியாண்மை மற்றும் தகவல் தொழிநுட்பம் போன்ற தொழிற்கல்வி பாடங்கள், NVQ, தற்போது SLIATE இல் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள tourism போன்றனவும் தொழிற் கல்வி பயிற்சியை வழங்கும் அடிப்டையிலேயே உருவாக்கப்பட்டது.

மேலும் இயற்கைவாதத்தில் ஆசிரியர் பற்றிய எண்ணக்கருவானது ஒரு ஆசிரியர் வழிகாட்டியே அன்றி கற்பிப்பாளர் அல்ல எனும் கருத்தையும் ரூசோ முன்வைத்தார். இதன் அடிப்படையில் இன்றைய பல்கலைகழகங்களில் விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கான பாடம் தொடர்பான அறிவை தாமாக தேடலில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளும்படி செய்கின்றனர்.

உதாரணமாக assignments, presentations, field works போன்றவற்றின் மூலம் மாணவர்களின் பரந்த தேடல் விருத்தியாக்கப்படுவதுடன் பல வகையான விடயங்களையும் தாமாக கற்றுக்கொள்கின்றனர். தற்பொழுது உருவாகியுள்ள COVID-19 பிரச்சினை காரணமாக அதிகமான தேடலின் முக்கியம் உணர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர்கள் பற்றி பார்க்கும் போது இயற்கைவாதத்தில் ஆசிரியர்கள் போதனையிலும் சாதனையிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும், அடக்குமுறையால் அன்றி மாணாவர்களை அன்பால் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது ஆனால் நடைமுறையில் அனைத்து ஆசான்களும் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. பல ஆசிரியர்கள் தங்களுடைய அறிவை விருத்திசெய்யாமல் பழைய விடயங்களையே கற்பிக்கும் நிலை காணப்படுகின்றது.
MED, Doctor of philosophy in education, SLEAS, SLPS, SLTS என்ற பல படி நிலைகள் காணப்பட்டாலும் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவானதே. மேலும் ஒழுக்க விடயங்களை பற்றி பார்க்கும்போது சில ஆசிரியர்களின் நடத்தைகளால் மாணவர்களுக்கு சிறந்த விழுமியங்களை கற்பிக்க இவர்களுக்கு தகுதியில்லை என்ற எண்ணம் தோன்றுகின்றது. முக்கியமாக மாணவர்களை துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியர்கள் புனிதமான ஆசிரியர் என்ற போர்வையில் ஆசிரிய தொழிலுக்கு களங்கம் விளைவிக்கும் ஆபத்தானவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறானவர்களால் மாணவர்களின் பாதுகாப்பு அதிகமாக உணரப்படுகின்றது. உதாரணமாக பதுளை கந்தகெட்டியாவிலுள்ள பாடசாலையில் பணிபுரிந்த ஆசிரியர் தரம் 6 கல்வி கற்று வந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்தமை, மொனராகலையில் உள்ள உயர் பாடசலையில் கல்வி கற்ற மாணவியை ஆசிரியர்கள்(வரலாறு, தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள்) தகாத நடத்தையிக்கு உட்படுத்தியமை போன்றன ஆசிரியர்களின் ஒழுக்கயீனத்திற்கு சான்று பகிர்கின்றது.

மேற்கூறப்பட்ட விடயங்களின் படி இலங்கையை பொறுத்தமட்டில் மனனம் செய்தல், புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் கற்றல் எனும் கல்வியின் குறைபாடுகள் மாற்றப்படவில்லை அதனோடு இணைந்த வகையில்தான் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. இயற்கைவாதம் கூறும் பல நடைமுறைசார் விடயங்கள் இலங்கையில் இன்னும் கைக்கொள்ளப்படவில்லை என்றே கூறவேண்டும். அத்துடன் இயற்கைவாத கருத்துக்களை பொருத்தமட்டில் பல குறைபாடுகளும் உண்டு. மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இயற்கைநிலைக் கல்வியினை வழங்கும் பிள்ளைகள் இயற்கை இயல்புக்கேற்ப வளர்ச்சி அடைகின்றார்கள் என்று எம்மால் அறியக்கூடிய வகையில் உள்ளது. மேலும் இயற்கைவாதக் கருத்துக்களை மையமாக கொண்ட கல்வி சிறத்ததாக காணப்பட்டாலும் அதிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றது. எந்தவித கட்டுப்பாடும் இன்றி பிள்ளைகளை வளரக்கவும், கற்பிக்கவும் முடியாத ஒரு நிலை உண்டு. எந்த வகையிலாவது பிள்ளை வழிமாறினால் அதற்கான கட்டுப்பாடுகளை விதித்து சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். அதுமட்டுமன்றி இயற்கை விடயங்களோடு மாத்திரம் பிள்ளை கற்று வளராது. அனைத்து சூழ்நிலைகளினையும் பிள்ளைகள் உணரும் வகையில் அவர்களுக்கான கல்வித்திட்டம் அமைய வேண்டியது அவசியம் ஆகும்.


ச.பிரியசகி
2ம் வருட சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்.