உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளியாகின !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

குற்றப்புலானாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர் நேற்று முன்தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர் சஹ்ரான் ஹசீம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய நாள் கல்கிஸ்ஸ பகுதியில் பதிவு செய்த காணொளி ஒன்றில் தாக்குதலுக்கான காரணங்களை தெரியபடுத்தியதாக அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய நாளில், சஹ்ரான் ஹசீம் நீண்ட உடையை அணிந்து தரையில் விழுந்தவாறு பதிவு செய்த வீடியோக்கள் பலவற்றை இதுவரை ஊடகங்கள் ஒளிபரப்பாத காணொளிகளை அவர் ஆணைக்குழுவில் முன்வைத்தார்.

அதில் தாக்குதல் நடத்த உயிர்த்த ஞாயிறு தினத்தை தெரிவு செய்தமைக்கான நான்கு காரணங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாக அவர் ஆணைக்குழுவில் கூறினார்.

1. அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களை நேசிக்கவும், தடைசெய்யப்பட்ட செயல்களை நிராகரிப்பதாகும்.

2. முன்னாள் ஐ.எஸ் தலைவர் உருவாக்கிய இஸ்லாமிய அரசின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக்கு பழிவாக்குதல்.

3. நியூசிலாந்தில் ஒரு பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை கொலை செய்தமை

4. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள முஸ்லிம் மக்களைக் கொல்வதற்கு காரணமாணவர்கள் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டமை.

இவ்வாறான காரணங்களால் இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் தாக்கப்பட்டதாக சஹ்ரானின் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தற்கொலைக் குண்டு தாக்குதல்களை இலங்கையில் நடத்த காரணமானவைகள் குறித்தும் சஹ்ரான் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளதாக அவர் சாட்சியம் அளித்தார்.

1. அல்லாஹ்வின் சட்டத்தின்படி இஸ்லாத்தை தழுவ மறுக்கும் நபர்களை கண்ட இடத்தில் கொல்வது.


2. குளியாப்பிட்டியில் பன்றி உருவத்தில் அல்லாஹ்வை சித்தரித்தது.

3. அல்லாஹ் மறுபிறவி எடுத்தான் என்று ஞானசர தேரர் கூறியமை

4. முகமது நபிக்கு எதிராக குற்றம் சுமத்தல்.

5. குரானைக் கிழித்து எரித்தமை.

6. மஸ்ஜித் பள்ளிவாசல்களை இடித்தல்.

7. முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்து பொருளாதாரத்தை அழித்தமை

8. சர்வதேச சிலுவைப் போரில் இலங்கையின் பங்கேற்பு

9. அல்லாஹ் தெய்வத்தை ஏசுவது மற்றும் குறைத்து மதிப்பிடுதல்.

இவையே அந்த காரணிகள்.

மேலும் இந்த தாக்குதல் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும், அல்லாஹ்வை கௌரவபடுத்துவதற்காகவுமே நடத்தப்படுகிறது என்றும் அந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஆணைக்குழு வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம் குறித்து கவனம் செலுத்தியது.

இந்த காணொளி தாக்குதல் நடத்த முன்னர் அதாவது ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையான நேரத்தில் கல்கிஸ்சையில் உள்ள கட்டடத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் சாட்சியாளர் கூறினார்.

பின்னர் சஹ்ரான் ஹசீமிடம் இருந்த துப்பாக்கி குறித்து ஆணைக்குழு விசாரித்தது.

அது டி56 ரக துப்பாக்கி எனவும், 2017 ஆம் ஆண்டு முதல் பயிற்சிகளுக்காக அதனை சஹ்ரான் பாவித்துள்ளதாகவும் ஆனால் அந்த ஆயுதத்தை சரியாக தம்மால் அடையாளம் காண முடியவில்லை எனவும் சாட்சியாளர் ஆணைக்குழுவில் கூறினார்.