வட்ஸப் கல்விமுறை தோட்ட மாணவர்களுக்கு நன்மையாகுமா?


கொரோனா உலகம் முழுவதும் இந்த பெயரைக் கேட்டு நடுங்கிப் போயிருக்கிறது. இந்த பேரிடரில் இருந்து எவ்வாறு மீள்வது என்பதற்கான பதில் இதுவரைக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர, இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நோய் பரவலைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் ஒரு நடவடிக்கையாக நாட்டிலுள்ள அரச தனியார் பாடசாலைகள், மற்றும் தனியார் வகுப்புக்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கிக் காணப்படுகின்றனர்.

பெரும்பாலான மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள சில தமிழ், சிங்கள மொழி மூலமான மாகாணப பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகள் வட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளஙகளின் ஊடாக மாணவர்களுக்கு கல்வியை போதிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டன. இத்திட்டத்தை நகர பாடசாலைகள் மற்றும் வசதிப்படைத்த பாடசாலைகள் மட்டுமே பெரும்பாலும் முன்னெடுத்து வந்தன. எனினும் நகரத்தில் உள்ள தமிழ் மற்றும் தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு போதிய வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும், குறிப்பிட்ட சாதனங்கள் போதியளவு இல்லாத கரணத்தினாலும் இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சில பாடசாலை அதிபர்கள் அரசாங்க அறிவித்தலுக்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களின் ஊடாக தமது மாணவர்களுக்கான கல்வியை போதிக்கின்றனர். இவை முன்மாதிரியான செயற்பாடுகள். போதிய வசதி வாய்ப்புகள் இல்லையென்று ஒதுங்கியிருக்காமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எமது அதிபர்களும், ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தொலைபேசியை தொடாதே, தொலைக்காட்சியை பார்க்காதே என்று கூறி பல்வேறு கட்டுப்பாடுகளை பெற்றோர்களும், பெரியவர்களும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வந்தனர்.

ஆனால் இன்று இவை இரண்டுமே கல்விக்கு முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது. அரசாங்கமே தொலைபேசி மற்றும் தொலைகாட்சி ஊடாக கல்வியை போதிக்க அனுமதி அளித்து வருகிறது. ஆனால் தொலைத் தொடர்பு சாதனங்களை நாம் மிகக் கவனமாக கையாள வேண்டும் என்பதை மிகக் கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கின்றேன். இது குறித்து பெற்றோர்களும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரன சூழ்நிலைக் காரணமாக தற்போது பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது வாட்ஸப் மூலமாக கல்வி போதிக்கப்படுவது வரவேற்கக் கூடியது. எனினும் சில பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இதனால் போதிய பயன் கிடைப்பதில்லை. காரணம் அப்பகுதியில் தொலை தொடர்புக்கான சமிக்ஞை(சிக்னல்) கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் தெளிவாக கிடைப்பதில்லை. இதனால் அரசாங்கத்தினால் வினாபத்திரங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் சில இடங்களில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களின் ஊடாக கல்வி வழங்குவது தொடர்பாக கூறுகையில் பொதுவாக பாடசாலை கூட்டங்களின் போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்காதீர்கள், தொலைகாட்சி பார்க்க அனுமதிக்காதீர்கள் என்பர். தற்போது இவற்றை பாவிக்க விடுங்கள் என்கின்றனர். எல்லாம் காலமாற்றம். எனவே எந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் நன்மை, தீமை ஆகிய இரண்டும் நம்மை வந்து சேரும். அதனால் நாம் நன்மையை மட்டுமே எடுத்துக் கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

ரெங்கராஜ் வினுஜா
கிழக்குப் பல்கலைக்கழகம்.
3 ஆம் வருடம்.
கல்வியியல் சிறப்புக் கற்கை.