இலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக சமூகத்தில் பரவுவது பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது. மே மாதம் வரையில் முழு ஊரடங்கும் பின்னர் தளர்வுகளுடன் கட்டங்கட்டமாக ஊரடங்கு அமுலாக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.

இந்நிலையில் இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே, ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை சுத்தப்படுத்துதல், போன்ற விடயங்களை கடைப்பிடிக்குமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பொறுப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, ஏனையவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.