கல்முனையில் திண்மக்கழிவகற்றல் சேவை இடைநிறுத்தம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)
அட்டாளைச்சேனை பள்ளக்காடு பகுதியில் யானைகளின் தொல்லை அதிகரித்திருப்பதனால், அங்கு மின்சார வேலி அமைக்கும் நடவடிக்கை வன வள திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் கல்முனை மாநகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை அங்கு கொண்டு சென்று கொட்டும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு திண்மக்கழிவுகள் சேகரிப்பு பணிகள் இடைநிறுத்தப்படுவதாகவும் கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில், தமது வீடுகளில் சேர்கின்ற குப்பைகளை பொது மக்கள் தமது சொந்த இடங்களிலேயே வைத்து, முகாமைத்துவம் செய்து கொள்ளுமாறு கல்முனை மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை மீறி பொது இடங்கள் மற்றும் வீதிகளில் யாராவது குப்பைகளை வீசினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் மாநகர சபை மேலும் அறிவித்துள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் குப்பை கொட்டுவதெற்கென ஓர் இடம் இல்லாமையினால் கடந்த பல வருடங்களாக பள்ளக்காடு பகுதியிலேயே கல்முனை மாநகர பிரதேசங்களில் அன்றாடம் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் எடுத்துச் செல்லப்பட்டு, கொட்டப்பட்டு வருகின்றன. எனினும் தற்போது அந்நடவடிக்கை தடைப்பட்டுள்ளதை பொது மக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறும் மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.