17 வயது சிறுமி துஸ்பிரயோகம்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பலாங்கொடை, ராவணாகந்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமியொருவர் கொடூரமாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை நேற்று(08) மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இதன் போது சிறுமியின் உடற்பாகங்களை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய பலாங்கொடை, சின்னவல, கயிவத்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி கடந்த தினத்தன்று பாடசாலை சீருடை தைப்பதற்காக பலாங்கொடை நகருக்கு சென்றிருந்த போது காணாமல் போயுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், கடந்த தினத்தன்று சிறுமி இருக்கும் இடம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்த போதும் பொலிஸார் குறித்த இடத்திற்கு செல்லாததால் சிறுமியின் தந்தை உள்ளிட்ட சிலர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, வீடொன்றின் கட்டிலில் சிறுமி மயக்கமுற்ற நிலையில் இருந்ததாகவும், சந்தேகநபரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்ததாகவும் சிறுமியின் தந்தை தெரிவித்தார். பின்னர் உடனடியாக சிறுமி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, சிறுமிக்கு சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட போதும் சிறுமி உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்ததாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.