20 வருடமாக செயலிழந்து காணப்பட்ட மாகாண சபையை நடைமுறைப்படுத்திய பெருமை TMVP கட்சிக்கே இருக்கின்றது!



(ஏறாவூர் நிருபர்)
அரசியல் அதிகாரம் பெண்களின் கைகளில் கிடைக்கும் போது பொதுநல வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க முடியுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்---
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இங்கு வாழுகின்ற மக்கள் சமூக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றார்கள். இந்த மாவட்டத்தில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசியல் அதிகாரம் அவசியமாக காணப்படுகிறது. அவ்வாறான அரசியல் அதிகாரம் பெண்களின் கைகளுக்கு சென்றடையும் போது அவர்கள் மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் மிகவும் சிறப்பாக அமையும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழல் இந்த மாவட்டத்தில் 33 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை உருவாக்கியுள்ளது. அவர்களை சமூக பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டிய கட்டாய தேவை எமக்கு உள்ளது.

பெண் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும் போது அந்த சமூகம் இயல்பாகவே முன்னேற்றமடையும். எமது இளைய சமுதாயத்தின் கல்வி நிலையை முன்னேற்றுவதற்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அவர்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கும் நாங்கள் இழந்துள்ள அரசியல் குடியியல் பொருளாதார பண்பாட்டு உரிமைகளை நிலை நாட்டுவதற்கும் நாடாளுமன்ற அரசியலில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குரல் ஒலிக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் செய்த கட்சி. இந்த கட்சியினூடாக மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பல்வேறு வகையான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமென்ற முழுமையான நம்பிக்கை எனக்கு உள்ளது.

20 வருடமாக செயலிழந்திருந்த மாகாணசபையைப் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்திக்காட்டிய பெருமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு உள்ளது. அவர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு செயற்படுத்தியவர்கள் என்பதை நாங்கள் கண்கூடாக கண்ட உண்மை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை வெற்றியீட்டச் செய்வதன் மூலம் எம்முடைய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதும் மக்களின் குடியியல் அரசியல் உரிமைசார் பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பினை வழங்குவீர்கள் என்ற முழுமையான நம்பிக்கை உள்ளது.

ஊழல் அற்ற வெளிப்படையான அபிவிருத்தியுடன் கூடிய உரிமைசார் அரசியலை நடத்துவதற்கு இந்த கட்சியுடன் இணைந்துள்ளேன் என்றார்.

நேற்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.