கல்முனை நகர சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் இரு வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்

 (பாறுக் ஷிஹான்)
கல்முனை நகர சுற்றுவட்டத்தில் இருந்து செல்லும் பிரதான வீதிக்கு செல்லும் இரு வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன தெரிவித்தார்.

அண்மைக்காலமாக இப்பகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து நெருக்கடியினை குறைப்பதற்காகவும் மக்களின் அன்றாட போக்குவரத்தினை இலகுபடுத்துவதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனவே சமிஞ்சை விளம்பர பலகைகளை அவதானித்து வீதிகளில் பயணங்களை தொடருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊடாக ஊடறுத்து செல்லும் வீதி மற்றும் பிரதான வீதி இணையும் பகுதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து கல்முனை வாடி வீட்டு வீதியில் இருந்து செல்லும் வீதி கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் சந்திக்கும் பகுதி ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இருந்த போதிலும் கல்முனை நகரப்பகுதிக்கு மக்களின் அதிகரித்த வருகை காரணமாக இவ்வாறு ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.

அந்தவகையில் இச்சுற்றுவட்டத்தில் இணையும் பிரதான வீதி, உள்ளக வீதிகள் சில முதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கல்முனை பொலிஸ் நிலையம் முன்பாக பொதுச் சந்தைக்கு செல்லும் பாதையூடாக அப்பாதையின் இடது பக்கம் மட்டக்களப்பு பாதை - பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை திரும்பும் வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே இத் திடீர் மாற்றம் காரணமாக மக்கள் அவதானமாக செல்வதன் ஊடாக தண்டப்பணம் செலுத்துவதில் இருந்து தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் சோதனை நடவடிக்கைக்காக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது