பிரதேச வைத்தியசாலைகளை மாத்திரம் கொண்ட படுவான்கரை: கவனிப்பாரற்றதேன்?




(படுவான் பாலகன்) 
தேர்தல் களம் சூடு பிடித்துவருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில், ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் பாங்கும், ஒருவேலைக்கு பலர் சொந்தம் கொண்டாடுவதும் அரங்கேற ஆரம்பித்துள்ளது. விமர்சித்து பேசி வாக்குப்பெறுவதே புழக்கத்தில் உள்ள பழக்கமாகையால் பொதுத்தேர்தலுக்கான பிரசார உத்தியாக இதனையே கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு துறையில் அபிவிருத்தி காணவேண்டும் என்பது எல்லோரினதும் விருப்பு. அவ்வாறான அபிவிருத்திகளும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். ஆனாலும், கடந்த காலத்தில் பல்வேறு துன்பியலை கண்ட மக்களின் பகுதியில் அபிவிருத்தி மந்தகதியிலே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் பல அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாமலே உள்ளன. அவற்றில் வைத்தியத்துறையும் ஒன்றாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளடங்கலாக 22வைத்தியசாலைகள் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய 21வைத்தியசாலைகளும் மாகாணசபையின் கீழே உள்ளன. அவ்வாறுள்ள வைத்தியசாலைகளில், நான்கு வைத்தியசாலைகளே ஆதார வைத்தியசாலைகளாக இருக்கின்றன. வாழைச்சேனை, காத்தான்குடி, ஏறாவூர், களுவாஞ்சிகுடி ஆகிய வைத்தியசாலைகளே ஆதார வைத்தியசாலைகளாகும். மீதமுள்ள 17வைத்தியசாலைகளும் பிரதேச வைத்தியசாலைகளே.


இவ்வைத்தியசாலைகளில் பல குறைபாடுகள் நிலவுகின்றன. பல வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. வசதி குறைவினால், இங்குள்ள மக்கள் ஆதார வைத்தியசாலைகளையும், போதனா வைத்தியசாலையையும் நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது. சிறிய, சிறிய சிகிச்சைகளுக்குகூட நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலைமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு துன்பகரமான நிலையே.

அதேவேளை பரந்து விரிந்துள்ள படுவான்கரைப்பிரதேசத்தில் ஒரு ஆதார வைத்தியசாலைகள் கூட இல்லையென்பது இங்குள்ள மக்களுக்கு இன்னும் வேதனையே. அதிலும் பிரதேச வைத்தியசாலைகள் ஆரம்ப தரங்களுடனே உள்ளமை இப்பிரதேசம் கவனிப்பாரற்று இருந்துள்ளமையை புடம்போட்டுக் காட்டுகின்றது. அதேவேளை மாவட்டத்தில்; வைத்தியசாலை அபிவிருத்திகள் பக்கச்சார்பாக நடந்துள்ளதா? எனவும் சந்தேகிக்க தோன்றுகின்றது.

எனவே மாவட்டத்தில் படுவான்கரைப்பிரதேசத்தில் சகலவசதிகளுடன் கூடிய ஆதார வைத்தியசாலையொன்று உருவாக வேண்டும் என்பதும் இம்மக்களின் எதிர்பார்ப்பு. அவ்வெதிர் பார்ப்பினை மாகாணசபையின் ஊடாக கொண்டு மத்திய அரசில் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன்மூலமே இங்குள்ள மக்களின் துயரை துடைக்க முடியும்.