S4IG இன் COVID-19 பரவலின் பின்னரான சுற்றுலாத்துறை சார் வியாபாரங்களினை மீட்பு செய்வதற்கான வியாபார ஆலோசனை நிகழ்வு




இலங்கையின் கிழக்குப் பிராந்தியமானது, அதன் வரலாறு, கலாசார பன்முகத்தன்மை மற்றும் திறன்களினால் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரதேசமாக உள்ளதுடன், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையைச் சார்ந்த நடவடிக்கைகள் இப் பிராந்தியத்தின் முக்கியமான ஜீவனோபாய மார்க்கமாகவும் காணப்படுகின்றன. அந்தவகையில், உள்ளுர் சமூகங்கள் தங்களது தனித்துவமான கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமான பண்டிகைகள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் சுற்றுலா அனுபவங்கள் வாயிலாக உள்ளுர்ப் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதற்கு வழியேற்படுவதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவங்கள் மற்றும் இதர சேவைகளை வழங்குவதன் மூலம் வருமானமீட்டுவதற்கும் முடிகிறது. சுற்றுலாத் துறை சார்ந்த நடவடிக்கைகள் அதிக வருமானம் ஈட்டுவதோடு மட்டுமின்றி, நெகிழ்வான வேலை நேரத்துடனான வேலைவாய்ப்புகள் மற்றும் கலை, நடனம் மற்றும் இசைப் படைப்பாற்றல்களை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினையும் வழங்குகிறது. எவ்வாறாயினும், உலகின் ஏனைய வணிக நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு இணையாக இந்தத் தொழிற் துறையிலுள்ள பணியாளர்களின் திறன்கள் மற்றும் சேவைத்தரத்தினை மேம்படுத்துவதற்கு முறையான வழிகாட்டல் தேவைப்படுகிறது.



COVID-19 பரவலால் சுற்றுலாத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முறையான மற்றும் முறைசாரா வணிக நடவடிக்கைகள் தொடர்பில் நம்பிக்கையீனம் நிலவுவதோடு, பல வியாபாரங்கள் மூடப்பட்டு பணியாளர்கள் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பாதிப்புக்களை COVID-19 பரவல் இரட்டிப்பாக்கியுள்ளது எனலாம்.

சுற்றுலா மதிப்புச் சங்கிலியில் COVID-19 பரவலுக்குப் பின்னரான நிலைமையைக் கருத்திற் கொண்டு சுற்றுலாத்துறை சார்ந்த வியாபாரங்களின் மீட்பு செயல்முறையை ஆரம்பிக்கும் முகமாக Skills for Inclusive Growth (S4IG) அமைப்பானது தொழில்துறைகளை ஆதரிப்பதற்கும், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு உதவும் பொருட்டும் ‘வியாபார ஆலோசனை (Business Coaching)’  என்ற நிகழ்ச்சித் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது. குறிப்பாக, சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வளவாளர்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள முறையான மற்றும் முறைசாரா சுற்றுலாத் துறை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, ஒருங்கிணைந்த, சந்தை நிலைமைகளுக்கேற்ற நெகிழ்வான மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்வாங்கும் திறனபிவிருத்தியை மையமாகக் கொண்ட செயற்றிட்டமாகவே S4IG கருதப்படுகிறது. S4IG நிகழ்ச்சித் திட்டமானது, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் நிதியுதவி மற்றும் இலங்கையின் திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘வியாபார ஆலோசனை (Business Coaching)’  நிகழ்ச்சித் திட்டமானது, 400 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தொழில்முறை வழிகாட்டலை வழங்குவதன் வாயிலாக COVID-19 இற்கு பின்னரான அவற்றின் மீண்டெழுதலுக்கு வழிசமைப்பதுடன், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சுற்றுலா மதிப்புச் சங்கிலியில் உள்ளடங்கும் விடுதிகள், உணவு மற்றும் பான தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள், பயண முகவர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் “புதிய இயல்பு வாழ்க்கை" முறைக்கேற்ப தங்களது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உதவுகிறது.

COVID-19 இற்கு பின்னரான சூழலில் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக, மனிதவளம் மற்றும் நிதி முகாமை, இணைய வழியிலான சுற்றுலா, தொற்றுநோய்ப் பரவலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தகவல் தொடர்பு, விழா ஏற்பாடு மற்றும் விற்பனை மேம்படுத்தல், நிதி மற்றும் நிர்வாகம் போன்றவற்றைத் தெளிவுபடுத்தும் வியாபாரத் திட்டங்களைத் தயாரித்தல் போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிகளை வழங்கும் துறைசார் நிபுணர்கள் மற்றும் பயிற்றுனர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அணிதிரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த 4 மாவட்டங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வருமான மார்க்கங்களை அதிகரிப்பதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைகிறது.

தங்களது வியாபார செயல்திறனை அதிகரிக்க எதிர்பார்க்கும் நிறுவனங்கள் இந்தப் பயிற்சிகளில் கலந்துகொள்வதன் வாயிலாக, சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் சந்தை நிலைமைகளுக்கேற்ப விலை நிர்ணயம் செய்வது தொடர்பான வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக, புத்தாக்கம், திறனபிவிருத்திக்கான வழிமுறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள் தொடர்பான அறிவினை வளர்த்துக் கொள்வதற்கும், அதனை அடிப்படையாகக் கொண்டு வருமான மார்க்கங்கள் மற்றும் சேவைத் தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கும் இப்பயிற்சிகள் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகட்ட தெளிவுபடுத்தல் மற்றும் பயிற்சி அமர்வுகள் ஜூன் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கடந்த 17.06.2020 அன்று அம்பாறை ஹோட்டல் மொன்டி(Hotel Monty)  மற்றும் அறுகம்பை ப்ளூ வேவ் ஹோட்டல்(Blue Wave Hotel)  ஆகிய இடங்களில் இடம்பெற்றது.  இந்தப் பயிற்சி அமர்வுகள், கிழக்குப் பிராந்தியம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் S4IG உடன் இணைந்து தயாரித்துள்ள சுற்றுலாத் தளங்களை அடிப்படையாகக் கொண்ட ஒட்டுமொத்த இலக்கு சந்தைப்படுத்தல் மாதிரிகளுக்கு பங்களிப்புச் செய்வதற்கும், வியாபாரங்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் பெரிதும் கைகொடுக்கின்றன.

Skills for Inclusive Growth (S4IG) அமைப்பின் குழுத் தலைவர் திரு. டேவிட் ஆப்லெட் கருத்துத் தெரிவிக்கையில், “வியாபார மேம்படுத்தலுடன் இணைந்த தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி மற்றும் சேவைத் தரத்திலான முன்னேற்றமானது சுற்றுலாத் துறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தமது வருமானத்தை அதிகரிப்பதற்கான அவகாசத்தினை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் தனித்துவமான மற்றும் புத்துணர்ச்சி தரும் அனுபவங்களைப் பெறுவதற்கு வழியேற்படுகிறது.” அவர் மேலும் கூறுகையில் “சுற்றுலாப் பயணிகள் விடுதியில் ஓய்வாக அமர்ந்து சுவாரசியமில்லாத சேவைகள் மற்றும் செயல்பாடுகளை அனுபவிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, உயர் வருமானமீட்டும் சுற்றுலாப் பயணிகள் புதுமையான விடயங்களையே நாடுகின்றனர். இலங்கையை அதன் பன்முகத்தன்மையான கலாசார அமைப்புகள், தனித்துவமான உணவு வகைகள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடனேயே அவர்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள். ஓரே நாளில் இலங்கையின் எந்தவொரு பாகத்துக்கும் விஜயம் செய்ய முடியும். உலகில் வேறெங்கும் இவ்வாறான வசதிகளை அனுபவிக்க முடியாது. ஆயர்வேத மருத்துவம், நீர்வீழ்ச்சிகள், ஆர்ப்பரிக்கும் அலைகள், அடர்ந்த காட்டுப் பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட இலங்கை உண்மையிலேயே ஆசியாவின் ஆச்சரியமாகும்.”