நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் உரிமை கொண்டுள்ள பல வரலாற்று சாதனைகளும், சிந்திக்க வேண்டிய சிறுபான்மை சமூகங்களும்

(ஏ.எம்.எம் பர்ஹான்)
கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்த ஐந்து வருடத்திற்கான பாராளுமன்ற உறிப்பினர்களை தெரிவு செய்வதற்காக இலங்கையில் ஒன்பதாவது தேர்தல் நடாத்தி அதன் மூலம் உறுப்பினர்கள் தெரிவு தொடர்பிலான மக்கள் ஆணை வாக்குகள் மூலம் வழங்கப்பட்டு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஆகஸ்ட் 20ம் திகதி புதிய பாராளுமன்ற கன்னி அமர்வு இடம்பெறும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ வர்த்தமானி மூலம் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் உலகளவில் பல நாடுகள் கொரொனா அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசு நாடு முழுவதும் ஒரு பொதுத்தேர்தலை நடாத்தி முடித்துள்ளது. கொரொனா பரவலின் பின்னர் தெற்காசிய நாடுகளில் நடாத்தப்பட்ட முதல் தேர்தல் என்ற பெருமையையும் சாதனையையும் இலங்கை கொண்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்கு முன்னர் நடாத்த திட்டமிட்ட தேர்தலே இவ்வாறு ஆகஸ்ட் மாதம் நடாத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்தலில் நாட்டில் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் வாக்களித்ததுடன் பொதுத்தேர்தலில் தேர்தல் வாக்களித்த வீதம் 71% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையில் கொரொனா கட்டுப்பாட்டில் உள்ளது மட்டுமல்லாது இலங்கை மக்கள் கொரொனா அச்சத்தில் இருந்து மீண்டுள்ளதை பறைசாற்றி நிக்கின்றது.

வாக்களிப்பு வீதத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் அச்சமின்றி வாக்களிக்க வருமாறும் மக்களை அழைக்கும் விதமாக அரசியல் தலைவர்களும் வேட்பாளர்களும் தமது வாக்கினை காலை வேளையிலேயே இட்டுள்ளனர். மேலும் ஒன்பது வருடங்களின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வாக்களித்த சந்தர்ப்பமும் தேர்தல் தினத்தில் நடைபெற்றுள்ளது. வாக்களித்த பின்னர் அவர் அச்சமின்றி மக்கள் வாக்களியுங்கள் என்ற செய்தியையும் குறிப்பிட்டிருந்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரு தேர்தல் நடத்தப்படுவதும், நீண்ட இடைவெளியில் புதிய ஒரு பாராளுமன்றம் கூட்டப்படுவதும் இதுவே இலங்கை வரலாற்றில் முதன் முறையாகும். அதிகமான வேட்பாளர்களை மட்டுமல்லாது அதிக கட்சிகளையும் கொண்ட தேர்தலாக அதிக செலவு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட தேர்தலும் இதுவாகும். தேர்தல் முடிவுகள் படி ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சி நாடு பூராகவும் தேர்தல் மூலம் 128 ஆசனங்களையும் தேசியப்பட்டியல் மூலம் 17 ஆசனங்களையும்(மொத்தம் 145) கைப்பற்றி 43 வருடங்களின் பின்னர் அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது 1977க்கு பின்னர் இதுவே வரலாற்றில் முதன் முறையாகும்.

நாடு பூராகவும் 68 இலட்சத்தி 53ஆயிரத்து 693 வாக்குகளை தனதாக்கி கொண்டது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சி. மேலும் வரலாற்று சிறப்பு கொண்டுள்ள 1946ல் ஆரம்பிக்கப்படட பழமை வாய்ந்ததும் பலமுறை ஆட்சியை கைப்பற்றிய ஐக்கிய தேசிய கட்சி இம்முறை தேர்தலில் தேசியப்பட்டியல் (ஒரு ஆசனம்) தவிர்த்து எந்த ஒரு ஆசனத்தையும் வெற்றி கொள்ளவில்லை என்பது பாராளுமன்ற வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

மேலும் தேர்தலின் முடிவுகளின் படி நோக்கும் போது தந்தை மகனாக இம்முறை மூன்று குடும்பங்கள் பாராளுமன்றத்தை அலங்கரிக்கின்றனர். 1.பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது புதல்வன் நாமல் ராஜபக்ஸ 2.முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ மற்றும் அவரது மகன் சிசிந்திர ராஜபக்ஸ 3. முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் அவரது மகன் பிராமித பண்டார தென்னக்கோன் அவர்களும் ஆவர். இவ்வாறு மூன்று தந்தை மற்றும் மகன்கள் ஒரே தடவையில் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே வரலாற்றில் முதன் முறையாக அமைந்துள்ளது.

மேலும் கடந்த பாராளுமன்றில் இருந்த 60ற்கும் அதிகமான உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தோல்வி கண்டுள்ளனர். பல புதிய முகங்களுக்கான பாராளுமன்ற நுழைவுக்கான அனுமதியை மக்கள் வழங்கியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல தசாப்தங்களாக அடைந்து வந்த பாராளுமன்ற உறுப்புரிமை இந்த தேர்தல் மூலம் இழக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பல தசாப்தங்கலாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையின் மூலம் இம்முறை அந்த தகுதியை இழந்துள்ளார். மேலும் நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொண்ட பெற்ற 2இலட்சத்து 49ஆயிரத்து 435 வாக்குகள் மூலம் ஒரு தேசியப்பட்டியல் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிளவுபட்டு சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 27 இலட்சத்து 71ஆயிரத்து 980 வாக்குகளின் மூலம் 47 ஆசனங்களை வெற்றி கொண்டதுடன் 7 தேசியப்பட்டியல் ஆசனங்களையும் தனதாக்கி கொண்டது (மொத்தம் 54 ஆசனம்).

குறிப்பாக பல சிறுபான்மை கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டி இட்டதனால் இன்று எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டிய நிலையில் உள்ளனர். தனித்துப்போட்டியிட்ட தமிழ் மக்களின் தாய் கட்சியாக கூறப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சில தமிழ் கட்சிகள், அரசுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இங்கு சிறுபான்மை மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டியது யாதெனில் தமிழர், முஸ்லிம்கள் தனித்தனியாக தமக்காக ஒரு கட்சியில் போட்டியிட்டு அரசாங்கம் அமைப்பதற்கான பலத்தினை தங்களிடம் இருந்து வழங்கும் சக்தியாக மாற வேண்டும். எம்முள் இருக்கும் தனிப்பட்ட சுய இலாபங்களுக்காகவும் குரோதங்களுக்காகவும் கட்சி ரீதியாக பிளவு பட்டு வாக்குகளை களைத்து கிடைக்கப்பெறும் ஆசனங்களையும் குறைத்து நமக்கு நாமே துரோகம் செய்து கொண்டிருக்கிறோம் என்பது இந்த தேர்தல் மூலம் எமக்கு உணர்த்தியுள்ளது.

குறிப்பாக கிழக்கில் திகாமடுள்ள(அம்பாறை) தொகுதியில் கிடைக்கப்பெறும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது மேலும் சம்மாந்துறை மண்ணும் தனக்கான பிரதிநிதியை இழந்துள்ளது அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் கிடைக்கப்பெற்று வந்த முஸ்லீம் ஆசனம் இல்லாமலாக்கப்பட்டுள்ளதுடன் வழமையாக கிடைக்கப்பெறும் இரண்டு ஆசனங்களில் ஒரு முஸ்லீம் ஆசனம் மட்டுமே தக்க வைக்கப்பட்டுள்ளது.

எனவேதான் சிறுபான்மையாக வாழும் தமிழ், முஸ்லிம்களாகிய நாம் எதிர் வரும் காலங்களில் சிந்தித்து ஒற்றுமையாக செயல்படுவதால் மட்டுமே அதிக ஆசனங்களை கைப்பற்ற முடியும் என்பதுடன் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் மாற முடியும்.