ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமராக மஹிந்த பதவியேற்கின்றார்

2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியினை பதிவு செய்துள்ளது.

இருப்பினும் நாடாளுமன்றில் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள இன்னும் 5 ஆசனங்கள் அக்கட்சிக்கு தேவைப்படுகின்றன. அந்தவகையில் கூட்டணி கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெற்றுக்கொண்ட 2 ஆசனங்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கில் பெற்ற ஒரு ஆசனமும் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பெற்ற ஆசனங்களின் பிரகாரம் அவர்கள் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பானமையை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அதாவது கடந்த 2015 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,00,566 வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த சாதனையை தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முறியடித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்க உள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும் அமைச்சரவை பதவியேற்பது உட்பட முக்கிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.