இஸ்ரேல் - பஹ்ரைன் இடையே முதல் முறையாக நேரடி விமானப் போக்குவரத்து நேற்று ஆரம்பம்!

(எம்.ஜே.எம் பாரிஸ்)
இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல வருடமாக மோதல் நிலவி வருகிறது. இவ் மோதலை தனிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பயனாக 1979ம் ஆண்டு எகிப்தும், 1994ம் ஆண்டு ஜோர்தானும் இஸ்ரேலிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாகவும் அங்கீகரித்தன.

ஆனால், பிற வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்தும் வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக் கொள்ளாமலும், இஸ்ரேலுடன் பொருளாதாரம், வெளிவிவகார, தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்ததையடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் கடந்த 15ம் திகதி இஸ்ரேல் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- பஹ்ரைன் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ் ஒப்பந்தத்தையடுத்து, இந்நாடுகள் இடையே சமாதானம் ஏற்பட வழி பிறந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு இஸ்ரேலுடன் விமானப் போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் இடையே பல வருடமாக விமானப் போக்குவரத்து நடைபெறாமல் இருந்தது. ஆனால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலிலிருந்து பஹ்ரைன் நாட்டிற்கு நேற்று முதல் நேரடி விமானப்போக்குவரத்து சேவை நேற்று தொடங்கப்பட்டது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நகரத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரேலுக்கு சொந்தமான Israir Airlines விமானம் 3 மணி நேரம் பயணித்து, பஹ்ரைன் வந்து சேர்ந்தது. அவ்விமானத்தில் இஸ்ரேல் பிரதமரின் முக்கிய அதிகாரிகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் குஷ்னெர் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சமாதான ஒப்பந்தத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் விமானப் போக்குவரத்து பஹ்ரைன் நாட்டுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட உதவும் என இஸ்ரேலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நாட்டிற்கும் பஹ்ரைன் நாட்டிற்கும் இடையே முதல் முறையாக நேரடி விமானப் போக்குவரத்து நடைபெற்றுள்ள நிகழ்வு மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்பப்படுகிறது.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ஏற்கனவே நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.