சப்றிகம நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நாவற்குடா அம்பாள் வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுகிறது

(ஜனா)
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நாவற்குடா அம்பாள் வீதியை சப்றிகம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அரசாங்கத்தின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சம்மிக்க நோக்கு எனும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக, கிராமிய அபிவிருத்தியினூடாக நாட்டை அபிவிருத்தி செய்தல் எனும் தொணிப்பொருளில் நிதி மற்றும் பொருளாதார, கொள்கைத் திட்டமிடல் அமைச்சினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சப்றிகம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாவற்குடா அம்பாள் வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி வீதி அபிவிருத்தி பணிகளை, மாநகரசபை உறுப்பினர்களான ம.நிஷ்கானந்தராஜா, த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் பிரஷாந்தன், மாநகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களான எம்.ஏ.ஏம் றிஸ்வான், கே.நித்தியானந்தன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் குணமலர் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

வீதி அபிவிருத்தி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நடைமுறைப்படுத்தாது மாநகர சபையே பொறுப்பெற்று அதனிடமுள்ள ஆளனி மற்றும் இயந்திர வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி ஏற்படக் கூடிய நிர்வாக செலவுகள் மற்றும் ஒப்பந்த தரகுப்பண வழங்கல்கள் என்பவற்றை தவிர்த்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தினை முழுமையாக அவ் வீதி வேலையிலேயே பயன்படுத்துவதோடு மதிப்பிடப்பட்ட வீதியின் நீளத்தை விட மேலதிகமாக மேற்கொண்டு வருகின்றமைக்காக மாநகர சபையினருக்கு பொதுமக்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.