மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பிக்குவை கைது செய்யுங்கள் – கூட்டமைப்பு வேண்டுகோள்


மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பிக்குவை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக நேற்றைய தினம் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் , மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்கு அம்பிட்டிய சுமணரத்ண தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மட்டக்களப்பு மங்களராம விகாரையில் பௌத்த மதகுருவாக நீண்டகாலமாக செயல்பட்டு வரும் அம்பிட்டிய சுமணரத்ண தேரர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அத்துமீறிய காணி அபகரிப்புக்களையும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும் மேற்கொண்டு வருவதும் தமிழ் மக்களை துன்புறுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவித்துவருவதும் அரச அதிகாரிகளை தாக்கிவருவதும் தொடர்சியாக இடம்பெற்று வருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவரால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்கள் 2008, இருதயபுரம் கிராம சேவகரை தாக்கியமை 2013.07.13 மட்டக்களப்பில் தேசிய சமாதானப் பேரவையினால் நடத்தப்பட்ட கருத்தரங்கு இவரால் குழப்பப்பட்டு இடைநிறுத்தப்பட்டது.

2013, நவம்பர் மாதம் பட்டிப்பளை பிரதேச் செயலாளரை எச்சரித்தமை, கெவிளியாமடு கிராமசேவை உத்தியோகத்தரை தாக்கியமை,2016 பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள கட்டடத்தின் நினைவு பெயர் கல்லை உடைத்தமை,2018 செங்கலடி பிரதேச செயலாளரை துன்புறுத்தியமை,




2019, டிசம்பர் மாதம் கத்தோலிக்க மத குருவை தாக்கியமை,2020/09/21,தற்போது மட்டக்களப்பு வதுளை வீதியில் பங்குடாவெளியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அத்துமீறி பிரவேசித்து அதை பார்வையிட சென்ற அரச அலுவலர்களை தாக்கி துன்புறுத்தியமை, இவ்வாறு பலவருடங்களாக மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ண தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களையும் அரச அலுவலர்களையும் தாக்கியுள்ளார்.

இவரின் அத்துமீறிய அடாவடித்தனங்கள், வன்முறைகள் அனைத்தும் பொலிஸார் நேரடியாக பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில் அவர்களின் முன்னிலையிலேயே இடம்பெற்றுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன, பல சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றில் வழக்குகளும் இடம்பெற்றன. இருந்தபோதும் இவர் சட்டங்களை மதிக்காமல் வன்முறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே இந்த வன்முறைகளில் நேரடியாக ஈடுபடும் அம்பிட்டிய சுமணரத்ண தேரர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் இவ்வாறான வன்முறைகளையும் காணி அபகரிப்புகளை மேற்கொள்வதையும் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வேண்டுகின்றோம்.

இவரின் செயல்பாடுகள் இன நல்லுறவுக்கு பெரும் கேடாக உள்ளது என்பதை அறிந்து உடனடியாக இவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.