ரிஷாட்டின் பிணை கோரிக்கை இரத்து, நவம்பர் 10 வரை விளக்கமறியல்


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த பிணை விண்ணப்ப மனுவையும் நீதவான் தள்ளுபடி செய்துள்ளார்.


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குரிய 22 அரச பேருந்துகளை பயன்படுத்தி அழைத்து வந்தமையின் ஊடாக 9.5 மில்லியன் ரூபாய் அரச பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ரிஷாட் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் 2 பேரை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் கடந்த 13 ம் திகதி பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.


இதனை அடுத்து ரிஷாட் பதியுதீனை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதும் சில நாட்களின் பின்னர் தெஹிவளை எபினேஷர் வீதியிலுள்ள தொடர்மாடியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.