விளக்கமறியல் கைதி சந்திரகாந்தன் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கும் அறிவிப்பை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிற்போட்டது

(சிஹாராலத்திப்)
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதியான பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற இருந்த மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணியினால் சமர்ப்பிக்கப்பட்ட நகர்மனுவுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

குறித்த அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சந்திரகாந்தனுக்கு நீதிமன்ற அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணியான அபூபக்கர் உவைஸ் கடந்த வெள்ளியன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற திறந்த நீதிமன்றில் நகர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த போதிலும் அரச சட்டத்தரணியான மாதினி விக்னேஸ்வரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து அதற்கான உத்தரவு அறிவிப்பினை வழங்குவதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.சூசைதாசன் நேற்றுவரை(26) பிற்போட்டிருந்தார்.

இதற்கமைய இதற்கான உத்தரவை பற்றிய அறிவித்தல் இன்று வழங்கப்பட விருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் நீதிமன்றங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்றங்களில் தெரிபடுவதில்லை என்று எடுத்துக்கொண்ட தீர்மானத்துக்கு அமைய இன்று வழங்கப்படவிருந்த உத்தரவுபற்றிய அறிவித்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற பதிவாளர் குறித்த அரச சட்ட வழக்குரைஞர் மாதினி விக்னேஸ்வரனுக்கும் சந்திரகாந்தனின் சட்டத்தரணி உவைசுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் பிரவேசித்த பணியாளர்கள், பொலிசார், மற்றும் வழக்குகளின் பிரதிவாதிகளும் கொரோனா வைரஸ் தடுப்பு நடைமுறைக்கு அமைவாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்ததாக நமது செய்தியாளர் அறிவிக்கின்றார்.