அம்பாறை மாவட்டத்தில் பல மாதங்களின் பின்னர் பெய்த மழையினால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி

(வி.சுகிர்தகுமார்)  
அம்பாறை மாவட்டத்தில் பல மாதங்களின் பின்னர் பெய்த மழையினால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் சிலர் தங்களது விவசாய விதைப்பு நடவடிக்கையினையும் துரிதப்படுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் 90 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான விவசாய நிலங்களில் விதைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழையின்மை காரணமாக விவசாய நிலம் வரண்ட நிலையில் விதைப்பு நடவடிக்கை யாவும் வீணற்று போய்விடுமோ எனும் அச்சத்தில் விவசாயிகள் உறைந்து போயிருந்தனர்.

சிலர் மறுபடியும் விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும் எனும் நிலையில் பெருங்கவலை அடைந்திருந்தனர். இதனால் பல இலட்சம் ரூபா நஷ்டத்தினை எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் அங்கலாய்த்திருத்தனர்.

இந்நிலையில் முதல் பெய்து வரும் மழை கண்டு விவசாயிகள் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திழைத்திருந்ததை இங்கு காண முடிந்தது.

அதிகமான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் முளைவிட்டுல்ல நிலையில் விவசாயிகள் வரம்புகளை சீர் செய்ததுடன் தமது விவசாய நடவடிக்கையில் வழமைபோல் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

சிறிய வாய்க்கால்களிலும் நீர் வழிந்தோடுவதையும் வயல்வெளிகளிலும் அதிகளவான நீர் தேங்கி நிற்பதையும் கண்டு கொள்ள முடிந்தது.