மட்டு. புதூர் பகுதியில் அமைக்கப்பட்ட வீடு இராஜாங்க அமைச்சரால் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது!

(வவுணதீவு நிருபர்)
அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் "கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம்" எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு புதூர் பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டினை உரிமையாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிக்கு வீட்டினை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.

வீட்டினை திறந்து வைத்ததுடன் இராஜாங்க அமைச்சரினால் குறித்த வீடு அமைந்துள்ள வளாகத்தில் பயன்தரும் மரக் கன்று ஒன்றும் நாட்டிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முற்போக்கு தமிழர் கட்சியின் பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.