மட்டக்களப்பில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களது நலன்கருதி மாதிரி வினாப்பத்திரங்ள் வழங்கும் திட்டம்

(எம்.ஜி.ஏ நாஸர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புற மற்றும் பின்தங்கிய கிராம பாடசாலைகளிலிருந்து இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களது நலன்கருதி வைஎம்சீஏ நிறுவனம் மாதிரி வினாப்பத்திரங்களை இலவசமாக அச்சிட்டு வழங்கும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி மற்றும் கல்குடா ஆகிய கல்வி வலயங்களிலுள்ள ஐம்பது பாடசாலைகளுக்கு வினாப்பத்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பத்து பாடசாலைகளின் 342 மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்கள் வலயக்கல்விப்பணிமனையில் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்எச்எம்.றமீஸிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வைஎம்சிஏ பொதுச்செயலாளர் ஜெகன் ஜீவராஜ், செயற்பாட்டுச்செயலாளர் எஸ்.பெற்றிக் மற்றும் திட்ட உத்தியோகத்தர் வீ.பிரேம்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்தில் றிதிதென்ன அல்- இக்றா, காவத்தமுனை அல்- அமீன் மற்றும் தியாவட்டவான் அறபா ஆகிய பாடசாலைகளுக்கும்

காத்தான்குடி பூனொச்சிமுனை இக்றா, பாலமுனை அலிகார், அல்- அஷ்ரப், ஒல்லிக்குளம் அல்- ஹம்றா காங்கேயனோடை அல்- அக்ஷா ஆகிய பாடசாலைகளுக்கும்

ஏறாவூர் கல்விக்கோட்டத்தில் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை மற்றும் தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்குமான மாதிரி வினாப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இதையடுத்து மாதிரிப்பரீட்சை நடைபெறுவதையும் அதிகாரிகள் அவதானித்தனர்.