ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு சாதாரணதர பரீட்சையின் மாதிரிப்பரீட்சை வினாத்தாள்கள் கையளிக்கும் நிகழ்வு

(ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ நாஸர்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு செயலட்டைகள் மற்றும் மாதிரி பரீட்சைகள் நடாத்தும் பணிகள் நன்கொடையாளர்களது ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கு சாதாரணதர பரீட்சையின் ஆறு பிரதான பாடங்களுக்கான மாதிரிப்பரீட்சை வினாத்தாள்கள் கையளிக்கும் நிகழ்வு வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது.

இவ்வினாத்தாள்களை அச்சிடுவதற்கான நிதியினை ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர் எம்எஸ்.நழீம் சபையின் மூலம் தனக்கு வழங்கப்படும் நான்கு மாதங்களுக்கான கொடுப்பனவினை அன்பளிப்புச் செய்துள்ளார்.

வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானாவின் பங்கேற்புடன் பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்எம்.மௌஜுத் தலைமையில் நடைபெற்ற வினாத்தாள்கள் கையளிப்பு நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எம்எச்எம்.றமீஸ், எம்ஜேஎப்.றிப்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அலிகார் தேசிய பாடசாலை, றகுமானியா மகா வித்தியாலயம், அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயம், அல்- அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் அறபா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான வினாத்தாள்கள் அப்பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் சாதாரண தர பரீட்சை நடாத்தப்படுவதற்கு முன்னதாக இன்னுமொரு மாதிரிப்பரீட்சையை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வலயக்கல்வியலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப்பணிப்பளார் முகமட் றமீஸ் அறிவித்துள்ளார்.

இதேவேளை இம்மாணவர்களுக்கு சாதாரண தர பரீட்சையின் ஒன்பது பாடங்களுக்குமான 15 செயலட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 15 செயலட்டைகள் வழங்கப்படவுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் தொடரப்படாதுள்ளதைக் கருத்திற்கொண்டு மாணவர்களது நலன்கருதி வலயக்கல்வியப்பணிமனை இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.