சஹ்ரானை வழிநடத்தியவர் உயிருடன் உள்ளார்- முன்னாள் சி.ஐ.டி அதிகாரி

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரும் கொல்லப்பட்டும் கைதுசெய்யப்பட்ட போதிலும் இந்தத் தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி இன்னமும் உயிருடன் உள்ளார் என சி.ஐ.டி.யின் முன்னாள் அதிகாரி ரவிசெனவிரட்ண தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். சஹ்ரான் ஹாசிமை வழிநடத்திய சக்தியொன்று உள்ளது எனத் தெரிவித்த அவர் அந்த நபரை கைதுசெய்ய கடுமையான முயற்சிகள் தான் ஓய்வுபெறும் வரை இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது சஹ்ரான் ஹாசிமின் திட்டமல்ல. கண்ணுக்குத் தெரியாத சக்தியொன்றின் தீர்மானம் அது என அவர் குறிப்பிட்டார்.

வவுணதீவு, மாவனல்ல, வனாத்துவில்லு சம்பவங்கள் தொடர்பிலும் தாழம்குடா சைக்கிள் குண்டுவெடிப்பு தொடர்பிலும் சி.ஐ.டியினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலுக்கு சஹ்ரான் ஹாசிம் என்பவரும் அவரது சகாக்களும் காரணம் என்பது தெரியவந்தது. சி.ஐ.டி. சஹ்ரான் ஹாசிம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியது. விசாரணைகள் சஹ்ரானை வழிநடத்திய ஒருவர் அவருக்கு மேலாக செயல்பட்ட ஒருவர் உள்ளார் என்பதை வெளிப்படுத்தின எனத் தெரிவித்த சி.ஐ.டி. அதிகாரி தான் ஓய்வு பெறும்வரை அந்த நபரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.