ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட பாதீடு தோல்வி! சபையில் கடிதத்தை கிழித்தெறிந்த உறுப்பினர்

(செங்கலடி நிருபர் சுபோ)
மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்ட பாதீடு தோல்வியடைந்தது.

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) தலைமையில் இன்றைய வரவுசெலவுத்திட்ட அமர்வு இடம்பெற்றது.

வரவு செலவு திட்ட கூட்ட ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் வி.மோகனராஜன் ஆகியோர் குறித்த வரவு செலவுத்திட்டம் திருத்தம் இல்லாமையினால் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

இதனடிப்படையில் வரவு செலவு திட்டத்தை வாக்கெடுப்பிற்கு விடுமாறும் தவிசாளர் சபையில் அறிவித்தார்.

இதனிடையெ கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மு.முரளிதரன் உறுப்பினர் தெரிவிக்கையில், இங்கிருக்கின்ற உறுப்பினர்களை முட்டாளாக்க நீங்கள் நினைக்கக்கூடாது. இங்கு எமக்கு வழங்கப்பட்ட கடிதத்தை பார்த்தால் திருத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் இங்கு ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அப்படி இங்கு குறிப்பிடப்படவில்லை.

நீங்கள் வரவு செலவு திட்டத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுத்த பிரயாகித்தியத்தை விட கடந்தகாலத்தில் அபிவிருத்திகள் செய்திருக்கலாம்.

இதனிடையே கருத்து தெரிவித்த த.தே.கூட்டமைப்பின் சபை உறுப்பினர் சி.சர்வானந்தன் எமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கடிதத்தை பார்க்கும் போது சட்டத்திற்கு முரணான செயற்பாடு இடம்பெற்றுள்ளது எனக் கூறியவாறே கடிதத்தை கிழித்தார்.

இதன் பின் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் தவிசாளர் உட்பட 08 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன், 22 பேர் எதிராக வாக்களித்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தது.

31 பேர் கொண்ட இன்றைய சபை அமர்வில் ஒருவர் கலந்துகொண்டிருக்கவில்லை.