பிள்ளையானின் தம்பியால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க பணம் தருவதாக கூறியதாக சபை உறுப்பினர்கள் தெரிவிப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற பயத்தின் நிமிர்த்தமே பிரதேச சபையின் தவிசாளரால் நாளை திங்கட்கிழமை கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரனை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக தவிசாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பிரதேச சபையின் தவிசாளர் நாளை திங்கட்கிழமை கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரனையினை ஒத்தி வைப்பதாக ஊடகவாயிலான அறிக்கை விட்டுள்ளதை கண்டித்து பதினைந்து சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடக சந்திப்பொன்றினை ஓட்டமாவடி நாவலடியில் நடாத்தினர்.

குறித்த ஊடக சந்திப்பின் போது சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வறிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சபை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக நிதியினை செலவு செய்ததாக கூறினார். சபை நிதியினை எவ்வாறு செலவு செய்ய முடியும். இவ்வாறே சபையில் பல ஊழல்கள் இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரின் சகோதரர் சபை உறுப்பினர்களின் சிலரை எங்களது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் நாங்கள் உங்களுக்கு பணம் வழங்குகின்றோம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் முஸ்லிம் சபை உறுப்பினர்கள், தமிழ் சபை உறுப்பினர்கள் அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சபை உறுப்பினர்களிடம் பணம் வழங்குவதாக பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக பிரதேச சபை உறுப்பினர் கி.சேயோன் குற்றம் சாட்டியுள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபையில் பல ஊழல்கள் காணப்படுகின்றது. தவிசாளர் தலைமையில் செய்யப்பட்ட ஊழல்களை மறைப்பதற்காகவே வரவு செலவுத் திட்டத்தினை ஒத்தி வைத்துள்ளார். பிரதேச சபையின் தவிசாளர் தன்னால் எந்தவித ஊழலும் செய்யவில்லை என்று சொன்னால் சபையை கூட்டி வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பியுங்கள் என்று சபையின் பிரதி தவிசாளர் எஸ்.யசோதரன் சவால் விடுத்துள்ளார்.

அத்தோடு முடியுமானால் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து அதனை வெற்றி கொண்டு காட்டுங்கள். எங்களிடம் உங்களின் நடவடிக்கைக்கு எதிரான பதினைந்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து காணப்படுகின்றோம். தோல்வியின் பயத்தின் காரணமாகவே தவிசாளர் வரவு செலவுத் திட்டத்திற்கான சபை அமர்வினை கால வரையறையின்றி ஒத்திவைத்துள்ளதாக சபையின் பிரதி தவிசாளர் எஸ்.யசோதரன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வறிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சபை உறுப்பினர்களால் இருபத்தியொரு இலட்சம் ரூபாய் நிதிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் முப்பத்தி மூன்று இலம்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறுகின்றார்கள். இது தொடர்பில் விளக்கம் கேட்ட போதும் இதுவரை எங்களுக்கு பதில் இன்னும் வழங்கப்படவில்லை என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் (அஸ்மி) தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமானது சபைக்குட்பட்ட பகுதிகளும் வாழும் மக்களுக்கு ஏற்றதாக அமையவில்லை. அத்தோடு எங்களால் சமர்பிக்கப்படும் பிரேரணைகள் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தவிசாளர் மக்கள் நலன் சார்ந்து செயற்படுவதில்லை என தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கே.குணசேகரம் தெரிவித்தார்.

அத்தோடு தவிசாளர் கொரோனா வைரஸ் காரணமான சபையை கால வரையறையின்றி ஒத்திவைப்பதாக ஊடகவாயிலாக தெரிவித்திருந்தார். இது அவரது இயலாமையை காட்டுகின்றது. இவர் உடனடியாக வரவு செரலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து தோல்வியுற்று ஒரு நல்ல மக்கள் சேவையில் ஈடுபடும் ஒரு உறுப்பினரிடம் ஒப்படைத்து விலகுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கே.குணசேகரம் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பிப்பதற்கு உடனடியாக சபையை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரி பதினைந்து பிரதேச சபை உறுப்பினர்களால் மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட பிரேரனை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எந்தவித அறிவித்தலும் வழங்கவில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சபை உறுப்பினர் எம்.தையூப் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னனி, தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர்கள் பதினைந்து பேர் சபை நடவடிக்கைக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.