திவிநெகும மோசடி வழக்கு ! பசில் உட்பட நால்வரும் நிரபராதிகள் என விடுதலை !


திவிநெகும மோசடி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேரும் நிரபராதிகள் என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ஷ தரப்பு சமர்ப்பிப்புகளை முன்வைத்தது.

இந்த சாட்சியங்களை ஆராய்ந்த பின்னர் அரசு தரப்பும் சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்தது, அதாவது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த மோசடி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் 3 பேரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை இந்த வழக்கில் 3 மாதங்களுக்கு ஒரு தடவை குற்றப்புலனாய்வில் ஆஜராக வேண்டும் என விதிக்கப்பட்ட பிணை நிபந்தனையையும் அவருக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடையும் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றதினால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.