கொரோனா அச்சம் காரணமாக பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பு ஒத்திவைப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 காரணமாகவும் கிழக்கு மாகாணத்தில் தீடீர் என்று அதிகரித்து காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் காரணமாக நாளை 30.11.2020 ம் திகதி நடைபெற இருந்த கோறளைப்பற்று பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட கூட்டமானது கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அலையின் மூன்றாவது அலையாக ஆரம்பித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து காணப்படுவதனால் கோறளைப்பற்று பிரதேச சபையின்கீழ் உள்ள மூன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளிலும் பரவலாக பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்று வருவதுடன் பிரதேச மக்களும் மீண்டும் எமது பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்களா என்ற அச்சத்தில் காணப்படுவதனாலும் நாளை திங்கட்கிழமை எமது பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த விஷேட வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரவித்தார்.

இதன் திகதி பிரதேசத்தின் நலன் கருத்திற்கொண்டும் சுகாதார தரப்பினரின் ஆலோசனையின் பேரிலும் தீர்மானிக்கப்பட்டு சபையின் உறுப்பினர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.