தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் !

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலொன்றான கொழும்பு - 15 மேதரை- இக்பாவத்த பகுதியை சேர்ந்த மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், தமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.  அத்தோடு, குடும்பமொன்றுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு மாதத்திற்கு மேலதிகமாக தமது பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மக்கள், இந்நிலையில், மேலும் 14 நாட்கள் முடக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாளாந்தம் கூலித் தொழில்களை முன்னெடுத்து, வாழ்ந்துவரும் தமக்கு 5000 ரூபா கொடுப்பனவை கொண்டு ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ்வது எனவும் குறித்த பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்தோடு, தாம் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்த தருணம் வரை தம்மை எந்தவொரு அதிகாரியும் வந்து பார்வையிட வரவில்லை எனவும், ஆர்ப்பாட்டத்தின் பின்னரே இன்று முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகைத் தந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

மேலும், இவ்வாறானதொரு சூழ்நிலையில், தமக்கான வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வொன்றை பெற்றுத் தர அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இக்பாவத்தைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.