பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உலர் உணவுப் பொதி வவுச்சர்கள் வழங்கிவைப்பு

   (சித்தா)

பட்டிருப்பு கல்வி வலயத்தில் அசாதாரண சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் 40 பேருக்கு கல்வி அமைச்சினூடாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளுக்கான வவுச்சர்கள் வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் வைத்து இன்று 13.01.2021  வலயக் கல்விப் பணிப்பாளர்  திருமதி. ந.புள்ளநாயகம் தலைமையில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில்  பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின்  நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. எஸ்.மகேந்திரகுமார், கல்வி அபிவிருத்தக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.பி.திவிதரன் மற்றும் வலயத்தின் முன்பிள்ளைப்பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான திரு. ஏ.ஜெயவரதராஜன்  ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு தலா 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு வவுச்சர்களை வழங்கி வைத்தனர்.  ஆறு  மாத கால வரையறைக்குள் இலங்கையிலுள்ள அனைத்து சதோச விற்பனை நிலையங்களிலும் இவ்வவுச்சர்களுக்கு விரும்பிய பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.  

இதற்கு சொலிடரைட் லெய்கியு  ஸ்ரீலங்கா (Solidarite Laique Sri Lanka)  அமைப்பு மற்றும் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.. கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களில் 731 முன்பள்ளி ஆசிரியர்கள் இவ்வாறு பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.