மனைவி மற்றும் பேரப்பிள்ளைகளை காப்பாற்ற முனைந்த வயோதிபர் பலி ! அம்மம்மாவையும் சகோதரனையும் காப்பாற்றிய 13 வயது சிறுவன்மட்டக்களப்பு- வந்தாறுமூலை தீவு பிரதேசத்தில் சுமார் 15 அடி ஆழமான நீரோடை சேற்றுக்குழியில் தவறிவிழுந்த இரு சிறுவர்கள் உட்பட நான்கு பேரில் மூவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். 
 
62 வயதுடைய தொழிலாளி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தனது மனைவி மற்றும் பேரப்பிள்ளைகளை காப்பாற்ற முனைந்த அந்த வயோதிபர் அக்குழியில் விழுந்து மூழ்கியுள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வினால் ஏற்பட்ட விபரீதமே இதுவென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 13 வயதுடைய சிறுவனின் துணிகரமான செயல் இங்கு மெச்சப்படுகிறது.

வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய பேதுரு சிவராசா என்பவரே உயிரிழந்தவரென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கூலித்தொழிலாளியான இவர் தனது குடும்ப உறவினர்களை அழைத்துக்கொண்டு அண்மைக்கால வெள்ளத்தினால் பெருக்கெடுத்த நிலையில் காணப்பட்ட நீரோடையில் தூண்டிலிட்டு மீன் பிடித்துவிட்டு வேறுபாதையினால் வீடு திரும்பு ம்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது-- இவர்கள் திரும்பிவரும் வேளையில் அந்த வயோதிபரது மனைவி மற்றும் பேரப்பிள்ளைகளும் சேற்றுக்குழியில் விழுந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்ற முனைந்த வயோதிபர் நீரில் மூழ்கியுள்ளார். 

அவ்வேளையில் தாவர பற்றைகளைப்பிடித்து உயிர்தப்பிய 13 வயதுடைய சிறுவன் 9 வயதுடைய தனது சகோதரன் மற்றும் அம்மம்மாவையும் தலைமுடியில் பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளான்.

எனினும் அப்பப்பா முற்றாக மூழ்கியதனால் காப்பாற்ற முடியாது போயுள்ளது. கடந்த வருடம் இப்பாதையினால் பயணம் செய்த நம்பிக்கையிலேயே அவர்கள் இவ்வழியே மீண்டும் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே சட்டவிரோத மணல் அகழ்வாளர்கள் சுமார் ஐந்து அடி அகலமான இப்பாதையையும் தோண்டி மணல் எடுத்துள்ளதனால் பாரிய குழி ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்னறர்.

பிரதேச திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார். 

சடலம் பீ சீஆர் மற்றும் உடல் கூறு பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.


ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கோண்டுவருகின்றனர்.