கல்குடா கல்வி வலய வாகரைப் பிரதேசத்திற்கான தரம் 5 மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்திற்கு சிடாஸ் கனடா அமைப்பு அனுசரனை

(சித்தா)

கல்குடா கல்வி வலயத்தின் கோறளைப்பற்று வடக்கு கோட்டத்தின் (வாகரைப் பிரதேசம்) தரம் 5 மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்திற்கான அனுசரனையை சிடாஸ் கனடா அமைப்பு வழங்குகிறது. இத்திட்டத்திற்கான நிதியினை Avnicanada.com அமைப்பின் உரிமையாளர் திரு.ந.மு பொன்னம்பலம் அவர்கள் சிடாஸ் கனடா அமைப்பினூடாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்/ககு/சந்திவெளி ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.தினகரன் ரவி அவர்களும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (முகாமைத்துவம்), உதவிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி, ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

இச்சந்திப்பின்போது சிடாஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் திரு.க.பாஸ்கரன் அவர்களினால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலை கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.தி.ரவி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது சிடாஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோறளைப்பற்று வடக்கு கோட்டத்தின் (வாகரைப் பிரதேசம்) 20 பாடசாலைகளைச் சேர்ந்த 385 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயனடைவர். இப்பரீட்சையில் சித்தியடைந்து வெட்டுப்புள்ளியைப் பெறும் மாணவர்கள் அரச நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதுடன் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கின்ற வாய்ப்பும் இந் நிதிப் பயன்பாட்டின் மூலம் எதிர்பாரக்கப்படுகின்றது.