உயர்தர வகுப்புக்கள் ஜூலை மாதம் ஆரம்பம் - O/L பெறுபேறுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும்


மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஜூன் மாதமளவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும், அதன்படி அந்த மாணவர்களுக்கு ஜூலை மாதம் முதல் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு நாடுபூராகவும் 622,305 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 4,513 பரீட்சை

நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. அவர்களுள் 423,746 பேர் பாடசாலைகளினூடாகவும், 198,606 பேர் தனிப்பட்ட ரீதியாகவும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அத்துடன் பரீட்சைக்காக 542 ஒருங்கிணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்காக, அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு பரீட்சை நிலையங்களில் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறான நிலையங்கள் பற்றாக்குறையாக இருப்பதற்கு இடமிருப்பதனால் அதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இது வரையிலும் அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவை கிடைக்கப் பெறவில்லையாயின் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.