மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியினை மேற்கொள்ள சந்தர்ப்பம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 
அவுஸ்திரேலிய விருதுகள் உதவித்தொகை திட்டத்தினூடாக அரச உத்தியோகத்தர்கள் இளங்கலை மற்றும்  முதுகலை படிப்பினை அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம்  வழங்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் வருடந்தோறும் வளர்முக நாடுகளிலுள்ள தனிநபர்களின் திறன்களையம், அறிவையும் மாற்றியமைக்க மற்றும் அவர்களின் சொந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும் அவுஸ்திரேலிய விருதுகள் உதவித் தொகை திட்டத்தினூடாக சந்தர்ப்பமளித்துவருகின்றது.

இத்திட்டத்தினூடாக  அவுஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியினைத் தொடர ஆர்வமுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகளுக்கு சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொடுக்கும் விழப்பூட்டல் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர். திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இன்று (04) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது முதுகலை கல்வியினை அவுஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தொடர ஆர்வமுள்ள அரச அதிகாரிகளுக்கு, இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பித்தல், தேவையான தகைமைகள் மற்றும் அதன் நன்மைகள் தொடர்பாக அவுஸ்திரேலிய விருதுகள் திட்டத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான பணிப்பாளர் டெல் கணகசபையினால் விளக்கமளிக்கப்பட்டது.

இச்செயலமர்வில் உயர்கல்வியைத் தொடர ஆர்வமுள்ள பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களில் கடமை புரியும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்புலமைப் பரிசில் திட்டத்தினூடாக உயர்கல்வியினைத் தொடர்வோருக்கு அவுஸ்திரேலிய அரசினால் இருவழி பயணம் உட்பட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுவதுடன் ஊக்குவிப்புத் தொகைகளும் வழங்கப்பட்டுவருகின்றன. மேலும் கடந்த ஆண்டு இத்திட்டத்தினூடா 30 இலங்கையர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.