கொரோனா வைரஸின் மூன்றாவது அலை மே மாதத்தில் இலங்கையைத் தாக்கும்


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) பல எச்சரிக்கை விடுத்தபோதிலும் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றாமல் பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருமதி இலங்கை, சுற்றுச்சூழல் பிரச்சினை மற்றும் அசுத்தமான எண்ணெய் உள்ளிட்ட பல பிரச்சினைகளால், அதிகரித்து வரும் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய மிகவும் தீவிரமான சிக்கலை மறைத்துவிட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்க செயலாளர் மகேந்திர பாலசூரிய ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக நாடு இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக மக்கள் அச்சமின்றி வாழப் பழகிக்கொள்கின்றனர்.

அந்த அச்சத்தை மீண்டும் ஒரு முறை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடிப்படை கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களைக்கூட பின்பற்றாமல், பொருட்கொள்வனவு செய்யும்போது அல்லது பொதுப் போக்குவரத்து மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றல் உள்ளிட்ட தங்கள் இயல்பான செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் பேசுகிறார்கள் என்றும் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் மூன்றாவது அலை நம்மைத் தாக்கும்போது மட்டுமே இது எவ்வளவு தீவிரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது என்றும் விளைவுகளை சந்தித்து அதை சமாளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, மே முதல் புதிய கொத்தனிகள் தோன்றுவதை சமாளிக்க அதிகாரிகள் இப்போதே மருத்துவமனைகள் மற்றும் ஏனைய வசதிகளை தயார் செய்ய வேண்டும் என்றும் பாலசூரிய கூறியுள்ளார்.

இதெநேரம், தடுப்பூசி போடப்படுவதால், அவை 100 சதவீதம் பாதுகாப்பானவை என்று மக்கள் கருதுகிறார்கள் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டடுள்ளது.

ஏனைய நாடுகளில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட போதிலும் மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக புதிய முடக்க கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.