சங்கமண்கண்டி மயானத்தில் புத்தர்சிலை அமைக்க மீண்டும் முயற்சி! சிலை வைக்க அனுமதித்தால் குடி நீர்வசதி வீடுகள்!



( வி.ரி.சகாதேவராஜா)
பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்கமண்கண்டிக்கிராம மயானப்பகுதியில் புத்தர்சிலை அமைக்க மீண்டும் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

இப்பிரச்சனையை தீர்த்து வைக்குமுகமாக பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தருபவன் அனுருத்த நேற்று முன்தினம் (09) சங்கமண்கண்டிகிராம மக்கள் மண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டமொன்றை நடாத்தினார்.

கூட்டத்தில் பொத்துவில் முகுது மகாவிகாரை பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினர், வன பரிபாலனபகுதியினர் ,தொல் பொருளியல் பகுதியினர், கிராமசேவையாளர், பொருளாதாரஅபிவிருத்திஉத்தியோகத்தர்,  பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

புத்தர்சிலை அமைப்பது தொடர்பில் கருத்துக்கள் பரிமாறினர். பௌத்தபிக்கு கூறுகையில் சிலை வைக்க அனுமதித்தால் பின் தங்கிய உங்கள் பிரதேசத்திற்கு மலசலகூட வசதி குடி நீர்வசதி வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறினார்.

எமக்கு இது ஒன்றும் வேண்டாம் புத்தர்சிலை வைக்க விரும்பமில்லை என
அங்குவந்த பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினருக்கு பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்தனர்.

த.தே.கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் அங்கு மக்களுடன் சமுகமளித்து அங்குவந்த பிக்குமாரிடம் நியாயத்தை எடுத்துரைத்தார்.

இது தொடர்பில் உறுப்பினர் சுபோதரன் தெரிவிக்கையில்:
பொத்துவில் முகுது மகாவிகாரை பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் எமது மயானப்பகுதியில் புத்தர்சிலை அமைப்பதற்காக முயற்சிக்கின்றனர்.

இது எமது பிரதேச மயானம்.இதற்குள் புத்தர்சிலை அமைப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. எனவே முயற்சியை கைவிடுங்கள் என்றேன்.

பிரதேச செயலாளர் இறுதியாகக் கூறுகையில் மக்கள் விரும்பினால் மட்டுமே எதனையும் செய்யலாம் .மக்கள் விரும்பாததை நான் செய்யமுடியாதது என்று கூறியதும் கூட்டம் கலைந்தது.