புயலாக உருவெடுத்து தணிந்து போன சீருடை விவகாரம் ! முழு விபரம்


யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவமானது, உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ள விடயமாக மாறியுள்ளது.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமென அறிவிக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.

யாழ். நகரப் பகுதியை தூய்மையாகப் பேணும் நோக்கில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்கள் மற்றும் எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராக தண்டப் பணம் அறவிடுவதற்காக விசேட குழுவொன்றை யாழ் மாநகரசபை முதல்வர் நியமித்திருந்தார்.

யாழ் மாநகர சபையின் பணியாளர்கள் ஐவர் இதற்காக நியமிக்கப்பட்டிருந்ததுடன், இவர்களுக்கு விசேட சீருடையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. கடும் நீல நிற நீளக் காற்சட்டையும், மென்நீல நிற மேற்சட்டையுமாக இந்த சீருடை அமைந்திருந்தது.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட சீருடையில் ஐந்து மாநகரசபை ஊழியர்களும் பணியில் ஈடுபடும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட அதேசமயம், அப்படங்களை எல்.ரி.ரி.ஈயினரின் காவல்துறையினரின் அன்றைய படங்களுடன் ஒப்பிட்டு பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தன. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியிருந்தது.

இது குறித்து யாழ் மாநகரசபை முதல்வர்  மணிவண்ணன் ஊடகங்களுக்கு விளக்கமளித்திருந்தார்.

‘யாழ். மாநகர சபையால் மாநகரத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைச் செயற்பாட்டுக்காகவே இந்தக் குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சீருடையில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘இந்தப் புதிய காவல் படையானது, ஏற்கனவே மாநகர சபையில் பணி புரியும் ஐந்து ஊழியர்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் வடக்கில் உள்ள ஒரேயொரு மாநகரத்தைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்காக, குப்பைகளைக் கண்டபடி போடுபவர்கள் மற்றும் நகரை அசுத்தமாக்கும் பிற செயற்பாடுகளைச் செய்பவர்களைக் கண்டறிந்து அந்தச் செயற்பாடுகளைத் தடுப்பவர்களாகவே இருப்பர்’ என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

அத்துடன், இந்தச் செயற்பாடு கொழும்பு மாநகர சபையின் செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வீண்பழி சுமத்தப்படுவதாகவும் யாழ் மாநகரசபை முதல்வர் ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை யாழ் மாநகரசபையில் அறிமுகப்படுத்தப்பட்ட சீருடையைப் பெற்றுச் சென்றிருந்த பொலிஸார், அன்று இரவு 8 மணிக்கு யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனை விசாரணைக்காக அழைத்திருந்தனர்.

அவரிடம் ஆறு மணி நேர விசாரணை முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியா அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவருடைய இந்தக் கைது விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் எனப் பலரும் இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியிருந்தனர்.

இதற்கு அரசாங்கத்தின் சார்பில் பதில் வழங்கியிருந்த சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, இவ்விடயத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியிருப்பதாகவும், இதில் ஏற்படுகின்ற முன்னேற்றம் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

அரசியல்வாதிகள் மாத்திரமன்றி வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இவ்விவகாரம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவரின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட 25 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

‘குறித்த சீருடையில் எந்த விதமான உள்நோக்கமும் கிடையாது, இதில் எல்.ரி.ரி.ஈயினரின் சின்னமோ எதுவுமோ கிடையாது. யாழ் மாநகர சபையின் சின்னமே அதில் பொறிக்கப்பட்டுள்ளது’ என்று நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டதுடன், கொழும்பு மாநகர சபையைப் பின்பற்றியே சீருடையின் நிறம் தெரிவு செய்யப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி மாநகரசபை சட்டத்துக்கு அமைய விசேட பணிகளுக்காக ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது என்ற விடயமும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த நீதிமன்றம், மணிவண்ணனை பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு ஜுன் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சீருடை விவகாரம் சமூக ஊடகங்களின் மூலம் சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றப்பட்ட நிலையில், தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலரும் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றே சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே இவ்விவகாரம் பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இந்த நிலையில் மணிவண்ணனை விடுவிப்பதற்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “ஒரே நாடு ஒரே சட்டம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் கொழும்பு மாநகர சபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீருடையை ஒத்த சீருடையுடன் யாழ் மாநகரசபை பணியாளர்கள் மாத்திரம் செயற்படுவதற்கு தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயமானது?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

மக்களை எப்பொழுதும் அச்சத்தின் விளிம்பில் வைத்துக் கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு அங்கமே இது என்பது அவருடைய கருத்தாகவிருந்தது.

உட்கட்சி கழுத்தறுப்பு, கட்சியிலிருந்து இடைநீக்கம் என தொடர்ச்சியான சவால்களுக்கு மத்தியிலேயே மாநகரசபையின் முதல்வர் பதவியை மணிவண்ணன் ஏற்றிருந்தார். தான் சார்ந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியே அவரை இடைநிறுத்தி, அக்கட்சி உறுப்பினர்களே அவருக்கு எதிராக செயற்படும் அரசியல் பின்னணியில் மணிவண்ணனுக்கு தொடர்ச்சியாக சவால்கள் வந்துள்ளன.

ஈ.பி.டி.பி உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடனேயே மணிவண்ணன் முதல்வராகியிருப்பதால் ஏற்கனவே பல்வேறு விடயங்களில் அவருக்கு அழுத்தம் காணப்படுகிறது. இதற்கிடையில் புதிய சீருடை சர்ச்சை அவருக்கு மத்திய அரசாங்கத்திலிருந்து ஒரு அழுத்தமாக அமைந்து விட்டது. சவால்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட பொறுப்பை சரிவரச் செய்து தனது வினைத்திறனை நிலைநிறுத்தும் முயற்சியாக எடுத்த நடவடிக்கை அவருக்கு புதியதொரு சவாலை ஏற்படுத்தி விட்டது என்றே கூற வேண்டும்.

யாழ் மாநகரசபையின் பதவிக் காலம் இன்னும் ஒருவருடமே இருப்பதால் இதுபோன்ற சவால்களுக்கும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் மணிவண்ணன் தனது நிர்வாகத் திறமையை எவ்வாறு வெளிப்படுத்தப் போகின்றார் என்பது குறித்தே பலரும் கவனம் செலுத்துகின்றனர். அதேசமயம் இந்த சீருடை விவகாரம் பாரிய சிக்கல் எதுவுமின்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதும் நல்லதொரு விடயமாகும். இல்லையேல் தென்னிலங்கையில் அது மேலும் புயலைக் கிளப்பி விட்டிருக்கக் கூடும்.

 -பி.ஹர்ஷன்