மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம் !- மாவட்ட அரசாங்க அதிபர்



(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவின் மூன்றாவது அலையின் பின்னர் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுவதனைத் தொடர்ந்து விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று 18.05.2021 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இவ்விசேட கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நோயாளர்களுக்கான இடப்பற்றாக்குறை மற்றும் குணமடைந்து சொந்த இடங்களுக்கு திருப்பியனுப்பப்படுவோருக்கான விடயங்கள், தனிமைப்படுத்தப்பட வேண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்பாகவும், இக் காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற செயலணியும் தீர்மாணங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தொரிவிக்கையில், மாவட்டத்தின் கொவிட் நிலையினை கருத்திற்கொண்டு
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயல பிரிவிற்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நாளை (19) முதல் முழுமையாக முடக்குவதற்கான தீர்மானத்தினை தேசிய கொவிட் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

பாலமீன்மடு, நொச்சிமுனை, கல்லடி வேலூர், சின்ன ஊறணி, திருச்செந்தூர் ஆகிய ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படவுள்ளது.

இன்றிலிருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவையாக கருதப்படும் வியாபார நடவடிக்கைகள் மாத்திரமே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை கொவிட் தொற்றினை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கு மாவட்ட மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும், சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி நடப்பதன் ஊடாக கொவிட்டை முற்றாக ஒழிக்க முடியுமெனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணியின் இராணுவத்தரப்பு பிரதானி 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.