1000 ஐ தொடும் அம்பாரை மாவட்டம்- அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனை!



(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இன்று அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனையின் பிரகாரம் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், பொலிசார் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்பில் இப்பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

வீதியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தோர் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணித்தோர்கள் அக்கரைப்பற்று பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் கட்டுப்பாடுகளை மீறியோர் என கருதப்பட்டோர் மீதும் இப்பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு அத்தியாவசிய தேவைகளின்றி நடமாடியோர் மற்றும் வாகனங்களும் கண்காணிக்கப்பட்டன.

இதேநேரம் கொரோனா மூன்றாவது அலையின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 3000 தை அண்மித்துள்ள நிலையில் அம்பாரை மாவட்டத்திலும் 1000 தை தொடும் நிலையில் உயர்வடைந்துள்ளமை கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபர தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வடைந்துள்ளதுடன் அம்பாரை மாவட்டத்தில் 23 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்கள் பொறுப்புடனும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அரசு உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.