மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டுள்ளதுடன். கொரோனா 3 வது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 தினங்களில் 91 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் 1073 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கொரோனா மாவட்ட தடுப்பு செயணி கூட்டத்தினையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை திகதி காலை 6 மணியில் இருந்து (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியான 24 மணித்தியாலத்தில் வாழைச்சேனை பிரதேச சுகாதார பிரிவில் 20 பேருக்கும் அதில் ஒரு பிரபல்யமான ஹொட்டலில் பணியாற்றுகின்ற 18 பேருக்கும், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக 27 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 1073 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை மூன்றாவது கொரோனா அலையானது ஏப்பிரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 9 நாட்களில் 91 நோயாளிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளதுடன் இது முதல் இரண்டு அலைகளைப் போல் அல்லாது குணம் குறிகளுடன் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர் இதனால் அவர்களுக்கு ஒட்சிசன் தேவைப்படும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரடியனாறு, பெரியகல்லாறு. காத்தான்குடி ஆகிய 3 வைத்தியசாலைகளை கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியுள்ளோம். இருந்தபோதும் வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு நோயாளிகளை அனுமதிப்பதால் 75 வீதமான கட்டில்கள் நிரப்பப்பட்டுள்ளது

எனவே வரும் காலத்தில் எமது மாவட்டதிலுள்ள நோயாளிகளை வேறு மாவட்டத்திற்கு அனுமதிக்க வேண்டியுள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் 18 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சையளிக்கும் 4 வைத்தியசாலையாக வாகரை வைத்தியசாலையை மாற்றுவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது அது ஒருவாரத்தில் திறக்கப்படும்.

அதேவேளை தொடர்ந்தும் 94 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றதுடன் இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளதுடன் 970 பேர் குணமடைந்து வெளியேறி வீடுகளுக்கு சென்றுள்ளனர் என்றார்.