மட்டக்களப்பு சிவப்பு வலயமாக பிரகடனம்- 3 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது!


கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 3 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில், இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாகலிங்கம் மயூரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பில் கடந்த 24மணி நேரத்தில், 66 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு மரணங்களும் இடம்பெற்றுள்ளது.

அதாவது, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக 3 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது, கல்லடி வேலூர், சின்ன ஊறணி, திருச்செந்தூர் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிர் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள், சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.