மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்த 8 பேர் கைது



(நாஸர்)
மட்டக்களப்பு- கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்த எட்டுப்பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கிழ் இன்று கைதுசெய்து செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள எல்ரீரீஈ பயங்கரவாத இயக்கத்தை புனரமைக்கும் செயல் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரைக்கமைவாக கல்குடா பொலீஸாருடன் ஏறாவூர்ப் பொலிஸ் குழுவினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையினைச் செய்துள்ளனர்.

இவர்கள் தீபச்சுடர் ஏற்றி நினைவேந்தல் செய்தபின்னர் கடலில் மலர்த்தட்டு பூஜை செய்ததாத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கைதுசெய்யப்பட்ட இவர்கள் மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

வெளிநாட்டு டயஸ்போராக்களின் நிதியுதவியுடன் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் முக்கியஸ்தரான விபுலசேன லவக்குமார் என்பவரின் தலைமையில் இந்நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நபர் உட்பட எட்டுப்பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த தெரிவித்தார்.