போக்குவரத்து குற்றங்கள், வீதி விபத்துகளை இலகுவாக பொலிஸாருக்கு அறிவிக்க விசேட செயலி அறிமுகம்!


உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு , போக்குவரத்து குற்றங்கள் மற்றும் வீதி விபத்துகள் தொடர்பில் பொது மக்களிடம் தகவல் பெறும் வகையில் ஈ - ட்ரபிக் பொலிஸ் ஸ்ரீலங்கா (E-Traffic Police Sri Lanka) என்ற செயலியொன்று (Mobile App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவின் தலைமையில் , அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, வீதி விபத்துக்களினால் இடம்பெறும் இழப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய பொலிஸார் , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து வீதி விபத்துகளை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

பொதுமக்கள் எவ்வித கட்டணமும் இன்றி போக்குவரத்து குற்றங்கள் மற்றும் வீதி விபத்துகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்காக, ஈ - ட்ரபிக் பொலிஸ் ஸ்ரீலங்கா என்ற செயலி அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

இந்த செயலியை அனைத்து நவீன தொலைபேசிகளிலும் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும். போக்குவரத்து குற்றச்செயல்களை பதிவு செய்து, காணொளிகளை செயலி ஊடாக அனுப்பி வைக்கமுடியும்.

1995 ஆம் ஆண்டின் 14 இலக்கச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் மற்றும் வீதி பாதுகாப்பு தேசிய அதிகார சபையின் தலைவர் அன்டன் மெனஸ் ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

150 மில்லியன் ரூபாவை செலிவிட்டு , வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் 5 வருடங்களுக்கு அவசியமான உபகரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தற்போது அதிவேக நெடுஞ்சாலைகளில் மாத்திரம் பயன்படுத்தப்படும் வேக அளவு மாணிகளை, சாதாரண வீதிகளிலும் பயன்படுத்த பெற்றுக் கொடுத்தல் மற்றும் போதைப்பொருளை பாவித்தவாறு வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணவும் , வெளிச்சம் குறைவான வீதிகளை அடையாளம் காணுவதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இதுவரை காலமும் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர். தற்போது போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் பாவனையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பில் பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க உள்ளது. வீதி விபத்துகள் காரணமாக , வருடத்துக்கு 3000 பேர் உயிரிழப்பதுடன் 1500-1800 பேர் காயமடைகின்றனர். 7000 பேர் வரை அங்கவீனமடைகின்றனர். இந்த நிலைமையை தடுப்பதற்காகவே இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்கிரமரத்னவின் மேற்பார்வை மற்றும் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வாகன விபத்துக்கள் , போக்குவரத்து குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் அறவிடமுடியும்.

இதன்போது விபத்தில் காயமடைந்தால், சாரதிக்கு எதிராக ஆறு மாதம் சிறைத்தண்ணடனை வழங்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் 6 - 10 வருடகால சிறை தண்டனை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்.