பல துன்பங்களையும், கஷ்டங்களையும் தொடராக எதிர்நோக்கிக் கொண்டு வரும் சம்பூர் கிராம மக்கள் !



(பைஷல் இஸ்மாயில்)
திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சம்பூர் கிராமத்திலுள்ள கமநலச் சேவை நிலைய வீதி (ஏ.பி.சி வீதி) கடந்த பல வருடங்களாக குண்றும் குழியுமாக காணப்படுகின்றது. இவ்வீதியால் பிரயாணம் செய்வது மிகக் கடினமாக உள்ளது என்றும் இந்த வீதியை புணரமைத்துத் தருமாறு கோரி அப்பிரதேச மக்களும், விவசாயிகளும், வாகன சாரதிகளும், பாடசாலை மாணவர்களும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும், உள்ளுர் அரசியல்வாதிகளையும் கேட்டுக் கொள்கின்றனர்.

பயங்கரவாத யுத்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 2015 ஆண்டு மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறு சூடைக்குடா, கூனித்தீவு, நவரத்தன புரம் போன்ற கிராமங்களில் மீள் குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவதாக இருந்தால் இவ்வீதியால்தான் பணிக்கவேண்டும் என்றும் வேறு மாற்று வீதிகள் இல்லை எனவும் அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி சுமார் ஒரு கிலோ மீற்றர் (1 km) தூரம் வரை குண்றும் குழியுமாக காணப்படுவதால் குறித்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் வைத்தியசாலைக்குச் செல்வதாக இருந்தால் பல சிரமங்களை எதிர்கொண்டு செல்லவேண்டியுள்ளது. குறிப்பாக அவசர சிகிச்சையை பெற்றுக்கொள்ள செல்கின்றவர்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கிச் செல்லவேண்டியுள்ளது என்றும் மழை காலங்களில் இந்த வீதியால் முற்று முழுதாக பிரயாணம் செய்ய முடியாதுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து உள்ளுர் அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் பல தடவைகள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டத்தில் குறித்த வீதியை உள்வாங்கி புணரமைத்துத் தருமாறு கோரிய கடிதத்தையும் பிரதேச செயலாளரிடம் வழங்கியிருந்தோம். அதற்கு பிரதேச செயலாளரும் செய்து தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். பின்னர் பிரதேச செயலகத்தினால் மேற்கெள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டத்தில் குறித்த வீதி புறக்கணிக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தாத சம்பூர் குருக்கு வீதியை 20 இலட்சம் ரூபா நிதியில் அமைத்துள்ளனர் என்றும் அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, பயங்கரவாத காலத்திலும், பயங்கரவாதம் அற்ற இந்தக் காலத்திலும் பல துன்பங்களையும், கஷ்டங்களையும் அம்மக்கள் தொடராக எதிர்நோக்கிக் கொண்டு வருவதை எம் நாட்டு அரசாங்கமும், இது தொடர்பான உயர் அதிகாரிகளும், உள்ளுர் அரசியல்வாதிகளும் கவனத்திற் கொண்டு அக்கிராம மக்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.