'டீசல் கிடைக்காவிடின் முடக்கம் நீடிக்கும்'


ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குள் இலங்கையால் கோரப்பட்ட டீசல் கிடைக்கவில்லை என்றால், ஒக்டோபர் நடுப்பகுதி வரை முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையால் டீசலுக்கு பணம் கொடுக்க முடியாததால், நாட்டை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அறிந்ததாகக் கூறிய அவர், அரசாங்கம் ஏற்கெனவே டீசலுக்கு பணம் செலுத்தியதால் நாட்டிற்கு டீசல் வருவதாகக் கேள்விப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 க்குள் டீசல் வரவில்லை என்றால், அரசாங்கம் முடக்கத்தை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்றும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்

சர்வதேச வர்த்தக சபையுடன் ஒன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்ற போதே முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்தார்.

ஊடக அறிக்கையின்படி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சரிடம் கடன் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை வழங்குமாறு கோரியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பொதுவாக அவ்வாறு செய்யாவிட்டாலும், இலங்கை வெளியுறவு அமைச்சரின் கோரிக்கை நிறைவேறும் என்று நம்புவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.