மட்டக்களப்பில் விபச்சார விடுதி நடத்தியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


 மட்டக்களப்பில் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டு மாநகர சபை முதல்வரான சிவகீர்த்தாவை 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னாள் அமைந்துள்ள முன்னாள் மாநகர சபை மேயரான சிவகீர்த்தாவின் வீட்டிற்கு அருகில் நடாத்தி வந்த தங்கும் விடுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை கடந்த 2016-10-24 ம் திகதி பொலிசார் முற்றுகையிட்டு அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட விடுதியை நடாத்தி வந்த முன்னாள் மட்டு மாநகர சபை முதல்வரான சிவகீர்த்தாவை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக பொலிசார் வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு எதிராக மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் ஆஜராகாத நிலையில் 3 மாத காலத்தின் பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்தார்.

இதணைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முன்  தினம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னாள் மாநகர சபை மேயரை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.