போதைக்கு அடிமையாகும் பொலிஸாரின் எண்ணிக்கை அதிகரிப்பு


இலங்கை பொலிஸில் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு,போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கும் பொலிஸாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்னவால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் போதைப் பொருள்களுக்கு அடிமையான பொலிஸாரின் விபரங்கள் என்பன அக்கடிதம் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 2021.01.01 ஆம் திகதியிலிருந்து 2021.10.31 வரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் திணைக்களத்துக்குள் பொலிஸ் நிலைய அதிபர்கள் நியமனம், பொலிஸாரின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்தல், பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்க கேடான செயற்பாடுகளால் அவர்களை கைதுசெய்தமை தொடர்பான விடயங்கள் அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தடையாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் 184 பேர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இருவரைத் தவிர ஏனையோர் உரிய முறையில் நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு நியமிக்கப்பட்ட 126 பேர் எவ்வித நேர்முக பரீட்சைகள் ஊடாகவும் தெரிவு செய்யப்படாதவர்கள் என்றும் பொலிஸ் மா அதிபரால் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.