பொலிஸ் இராணுவ கூட்டு வீதித் தடை அரண் திறப்பு




(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்டக்களப்பு வெலிக்கந்தை எல்லை ரிதிதென்ன பகுதியில் பொலிஸ் இராணுவ கூட்டு வீதித் தடை அரண் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எச்.சுதத் மாசிங்க, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிலங்க பெர்னாந்து, நாவலடி இராணுவ அதிகாரி மேஜர் தேவகபோல், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர், ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் ஏ.சி.நியாஸ், வாழைச்சேனை வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ். றபீக், அல்கிம்மா நிறுவன பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாறூன், ஈஸ்ட் லங்கா பொலிஷக் நிறுவன தவிசாளர் எம்.ஐ.எஸ்.முஹமட் பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அல்கிம்மா நிறுவனம், வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்கம், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் ஆகியோரின் நிதிப் பங்களிப்பு மூலம் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட பொலிஸ் இராணுவ கூட்டு வீதித் தடை அரண் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வெலிக்கந்தை எல்லை பகுதியில் மக்கள் பாதுகாப்பு கருதியும், மாவட்ட எல்லைப் பாதுகாப்பு கருதியும் வீதித் தடை அரண் அமைக்கப்பட்டு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், மக்கள் நலன் கருதி குடி நீர் வசதியும் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் 22 இராணுவ கூட்டு வீதித் தடை அரண் அமைக்கப்பட உள்ளதாகவும், இவற்றுக்கான நிதிப் பங்களிப்பு வேலைத் திட்டங்கள் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்கள் மூலம் பெறப்பட்டு அரண் அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வா தெரிவித்தார்.