வியாழேந்திரனால் மேற்கொள்ளப்பட்ட உயிர் அச்சுறுத்தல் முறைப்பாடு குறித்து மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் விளக்கம்


(சுமன்)

நீதிக்காகப் போராடும் மக்களையும், இளைஞர்களையும் பொலிஸ் முறைப்பாடுகள் மூலம் அச்சறுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்னால் கொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் கொலை தொடர்பில் உரிய நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவதற்குத் தயராக இருப்போம் என மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்தார்.

கடந்த வருடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வீட்டின் முன்னாள் கொலை செய்யப்பட்டிருந்த மகாலிங்கம் பாலசுந்தரம் அவர்களின் பிறந்ததினத்தை அனுஸ்டிக்கும் முகமாக 2022.04.25ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாகசாந்தி மற்றும் நீதிக்கான போராட்டத்தின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்காக இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் தனது விளக்கத்தினைத் தெரிவித்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இருந்து அழைத்து என்னை வாக்கமூலம் ஒன்று பெறவேண்டும் என்று கோரியதற்கமைய நான் இன்றைய தினம் மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தேன். கடந்த 2022.04.25ம் திகதியன்று மட்டக்களப்பு ஊறணி திருமலை வீதியிலே கடந்த வருடம் இதே நாளில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களுடைய வீட்டிற்கு முன்னால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் அவர்களின் பிறந்ததினத்தை அனுஸ்டிக்கும் முகமாக அன்று ஒரு தாகசாந்தி நிகழ்வு அவரது குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந் நிகழ்விலே வட்டாரப் பிரதிநிதி என்ற வகையிலும், மாநகர பிரதி முதல்வர் என்ற வகையிலும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்விலே நானும் கலந்து கொண்டிருந்தேன். அன்றைய தினம் முன்னாள் இராஜாங்க அமைச்சருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், அந்த இடத்திலே நான் இருந்தமையையும் சுட்டிக் காட்டி முன்னாள் இராஜாங்க அமைச்சரால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இன்றைய தினம் எனக்கு விளக்கம் கோரப்பட்டிருந்தது. அந்தவகையிலே நான் என்னுடைய விளக்கத்தினைப் பொலிசாரிடம் தெரியப்படுத்தயிருந்தேன்.

கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வீட்டின் முன்னால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரம் அவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கப்பெறவில்லை. ஆனால், அவர்களுக்கு அச்சறுத்தல் என்ற பெயரில் நீதிக்காகப் போராடும் மக்களும், இளைஞர்களும் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுகின்றார்கள். இவ்வாறான நிலைமைகள் நிறுத்தப்பட வேண்டும். கொலை செய்யப்பட்டவருக்கே இன்னும் நீதி கிடைக்கப்படாத நிலை இருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் ஏனையவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான பொலிஸ் முறைப்பாட்டு செயற்பாடுகள்; வேதனைக்குரிய விடயம்.

அன்றைய நிகழ்வு தொடர்பிலான விடயங்களை நான் பொலிசாரிடம் தெரிவித்திருக்கின்றேன். அன்றைய தினம் பல மக்கள் பிரதிநிகளும் அங்கு கலந்து கொண்டிருந்தார்கள். கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக நாங்கள் என்றும் வீதியிலே இறங்கிப் போராடுவதற்குத் தயராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.