பெரியகல்லாறு கடல்நரச்சி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பாற்குடபவனி


(ரவிப்ரியா)

வருடம் ஒரு தடவை பெரியகல்லாறு கிராமமே விழாக் கோலம் பூண்டுவிடும். வருடம் ஒரு தடவை வைகாசி பூரணையை அடுத்து வரும் திங்களன்று நள்ளிரவு நடைபெறும் சக்தி பூர்வமான கடலம்மன் திருச்சடங்கை முன்னிட்டே வீதிகள் ஆலய வளாகம் என்பன கண்கவர் அலங்காரங்களால் கல்லாறே களை கட்டி நிற்கும் அழகே தனி.

கடந்த வருடம் பாதுகாப்பு காரணங்களால் பங்குபற்றுவோர் தொகை மட்டுப்பட்டிருந்ததால், பக்தர்கள் பங்கேற்காமலே சடங்கு முறைப்படி எளிமையாக நடாத்தப்பட்டது.

இவ்வாண்டும் அதே நிலைதானோ என்று கவலை கொண்டிருந்த பக்தர்களுக்கு இவ்வாண்டு அம்மன் அருள் புரிந்துள்ளார். இன்று அதிகாலை (16) திங்கள் அம்மனின் திருக்கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் புடைசூழ திருச்சடங்கு பதிய எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது.

அதன் ஓர் அம்சமாக பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாகர் ஆலயத்தில் இருந்து பட்டாடைகள் பளபளக்க கரங்களிலும் சிரசிலும் பாற்குடம் ஏந்தி சுமார் ஒரு கிலோமீற்றரிலும் கூடிய நீளத்தில் நூற்றுக்கணக்கான பாவையர் அணிவகுத்து அம்மன் அலயம் நோக்கி பாற்குட பவனியை பக்திபூர்வமாக நடாத்தி முடித்துள்ளனர். . அன்னை கடல்நாச்சி பாலபிசேகத்தால் உச்சி குளிர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றார். அதேவேளை பக்தர்கள் பசியாற சிறப்பாக அன்னதானமும் போட்டிபோட்டு நடைபெற்று வருகின்றது.

அம்மான் நேரடியாகக் காட்சி கொடுத்து இடத்தையும் காட்டி ஆலயம் அமைக்க வாக்குக் கொடுத்த பூர்விக வரலாற்றால் இந்த ஆலயத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தனக்குப் பிடித்தமான இடம் இதுதான என்பதை அடையாளப்படுத்தியதால் இத ஒரு புண்ணிய பூமியாக மக்களால் பூஜிக்கப்பட்டு வருகின்றது. சக்தியம் அபாரம். அதனால் கடல் கடந்து வாழும் இந்துக்களும் இதற்காக இங்கு வந்து கூடுவது வழமை.

எனவே பாரிய அலய வளாகத்தில் முழமையாக பக்தர்கள் நிறைந்திருப்பது இந்த ஆலயத்திக சக்திக்கு எடுத்தக்காட்டாகும்.

இன்று பிற்பகல் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கலை கலாசார அம்சங்களுடன் அம்மன் முகக் களை பறவைக் காவடிகள், காவடிகள் சகிதம் ஆலயத்திற்கு பக்திபூர்வமாக எடுத்துவரப்பட்டு நள்ளிரவு பூரண கும்பம் நிறுத்ததல் என்னும் முக்கிய நிகழ்வு இடம் பெற்று அதிகாலை செவ்வாய்க்காடுதலுடன் சடங்கு நிறைவுறும்’. அம்மனை நினைக்கும் அனைவருக்கும் அவள் அருள் நிச்சயம் உண்டு.